100 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழங்கால பொருட்கள் வைத்திருப்பவர்கள் பதிவு செய்ய வேண்டும்


100 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழங்கால பொருட்கள் வைத்திருப்பவர்கள் பதிவு செய்ய வேண்டும்
x
தினத்தந்தி 26 Sept 2019 4:30 AM IST (Updated: 26 Sept 2019 12:06 AM IST)
t-max-icont-min-icon

100 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழங்கால பொருட்கள் வைத்திருப்பவர்கள் பதிவு செய்ய வேண்டும் என தொல்லியல்துறை அதிகாரி காயத்ரி கூறினார்.

தஞ்சாவூர்,

தஞ்சை பெரியகோவிலில் இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறை சார்பில் தொல்பொருட்களின் பதிவு குறித்த விழிப்புணர்வு முகாம் நேற்று நடந்தது. முகாமையொட்டி பழங்கால பொருட்களின் புகைப்படங்கள் அடங்கிய கண்காட்சி நடந்தது. கண்காட்சியை சென்னை வட்ட இந்திய தொல்லியல்துறை அதிகாரி காயத்ரி தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பதிவு செய்ய வேண்டும்

1972-ம் ஆண்டு தொல்பொருட்கள் பதிவு சட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த சட்டத்தின் படி எந்தவிதமான தொல்பொருட்களும் வெளிநாட்டிற்கு எடுத்து செல்ல முடியாது. அதேபோல் இங்கே பலரது வீடுகளில் நிறைய தொல்பொருள்கள் இருக்கும்.

தனிப்பட்ட நபரிடமோ அல்லது நிறுவனத்திடமோ இருக்கும் தொல்பொருட்கள் மற்றும் கலைபொருட்களை வைத்து கொள்வதற்கும், அதை மற்றவர்களுக்கு பரிமாற்றம் செய்வதற்கும் இந்திய தொல்லியல்துறையிடம் கட்டாயம் பதிவு செய்திருக்க வேண்டும்.

பழங்கால பொருட்கள்

இந்த சட்டம் பலபேருக்கு தெரியாமல் இருக்கிறது. அந்த சட்டத்தை பற்றிய விஷயத்தையும், தொல்பொருட்களை பதிவு செய்த பின்னரே வைத்துக்கொள்ளலாம் என்பது குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவே இந்த முகாம் நடத்தப்படு கிறது. புகைப்பட கண்காட்சி வைக்கப் பட்டுள்ளது.

பழங்கால கெடிகாரங்கள் கூட பதிவு செய்த பின்னரே வைத்துக்கொள்ள முடியும். பழங்கால இசைக்கருவிகள், கத்தி, பழங்கால பேனா உள்ளிட்ட 100 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழங்கால பொருட்களும், 75 ஆண்டுகளுக்கு முற்பட்ட தஞ்சை ஓவியங்கள் உள்ளிட்ட பழங்கால ஓவியங்களையும் பதிவு செய்து கொள்ள வேண்டும். இதற்கு எந்தவிதமான கட்டணங்களும் கிடையாது.

பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்

இந்திய தொல்லியல்துறை சென்னை வட்டத்தின் www.asi-c-h-e-n-n-ai.gov.in என்ற இணையதளத்தில் விதிகள் என்ற பகுதியில் 1972-ம் ஆண்டு சட்டம் என்று குறிப்பிடப்பட்டுள்ள பக்கத்தில் படிவம்-7, படிவம்-9 என்று இருக்கும். படிவம்-7 பதிவு செய்வதற்கான படிவம். படிவம்-9 இந்தியாவிற்குள் தொல்பொருட்களை மாற்றம் செய்து கொள்வதற்கான படிவமாகும்.

இந்த படிவத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள இந்திய தொல்லியல்துறையின் பதிவு அதிகாரிக்கு அனுப்பினால், அவர் சரிபார்த்து பழங்கால பொருட்களாக இருந்தால் அதை பதிவு செய்து அதற்கான சான்றிதழை தருவார்.

முத்தம்மாள் சத்திரம்

தொல்லியல்துறையிடம் இருந்து தடையில்லா சான்று வாங்கினால் மட்டுமே பழங்கால பொருட்களை வெளிநாட்டிற்கு கொண்டு செல்ல முடியும். இதுவரை 50 ஆயிரத்திற்கு மேற்பட்ட சிலைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால் இன்னும் ஏராளமான சிலைகள் பதிவு செய்யப்படாமல் உள்ளன. அவைகள் எல்லாம் பதிவு செய்யப்பட வேண்டும்.

ஒரத்தநாட்டில் 1,800-ம் ஆண்டு கட்டப்பட்ட முத்தம்மாள் சத்திரம் பாதுகாக்கப்பட்ட சின்னமாக அறிவிக்கப்படுவது தொடர்பாக துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதேபோல் புகைப்பட கண்காட்சி இந்தியா முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது. சுதந்திரம் அடைவதற்கு முன்பு நிறைய சிலைகள் வெளிநாட்டிற்கு கொண்டு செல்லப்பட்டன. அந்த சிலைகளை மீண்டும் நமது நாட்டிற்கு கொண்டு வரும் முயற்சியில் இந்திய தொல்லியல் துறையினரும், போலீசாரும் ஈடுபட்டு வருகின்றனர். அந்த முயற்சியின் மூலம் சிலைகள் கொண்டு வரப்படும்.

கலைப்பொருட்கள்

சில கோவில்களில் கலைப்பொருட்கள் இருக்கும். கலைப்பொருட்கள் என்பது இப்போது செய்யப்பட்டது. தொல்பொருட்களை போலவே கலைப்பொருட்களை செய்வார்கள். தொல்லியல் அறிஞர்களின் அனுபவத்தின் மூலம் அவைகள் தொல்பொருட்களா? அல்லது கலைப் பொருட்களா? என்பதை கண்டுபிடிக்க முடியும்.

கடைகளில், கலைப் பொருட்கள் விற்பனை செய்வதை மக்கள் வாங்கி செல்கின்றனர். பதிவு செய்யப்பட்ட தொல்பொருட்களை உள்நாட்டிற்குள் எங்கு வேண்டுமானாலும் எடுத்து செல்ல முடியும். கோவில்களில் உள்ள தொல்பொருட்களும் பதிவு செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த கண்காட்சியில் தஞ்சை தமிழ்ப்பல்கலைக் கழக புலத் தலைவர் ஜெயக்குமார், மன்னர் சரபோஜி அரசு கலைக்கல்லூரி பேராசிரியர் சுரேஷ்பாபு, இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் கிருஷ்ணன், நிர்வாக அலுவலர் மாதவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story