மத்திய மந்திரி அமித்ஷா மும்பை வருகை திடீர் ரத்து: தொகுதி பங்கீடு இழுபறி காரணமா?
மத்திய மந்திரி அமித்ஷா மும்பை வருகை திடீரென ரத்து செய்யப்பட்டது. இதற்கு தொகுதி பங்கீடு இழுபறி காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.
மும்பை,
288 தொகுதிகளை கொண்ட மராட்டிய சட்டசபைக்கு அடுத்த மாதம் (அக்டோபர்) 21-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் கூட்டணி வைத்து போட்டியிடும் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து விட்டன. குறிப்பாக தேசியவாத காங்கிரஸ், வஞ்சித் பகுஜன் அகாடி மற்றும் ஆம்ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் முதல் சுற்று வேட்பாளர் பட்டியலையும் வெளியிட்டுவிட்டன.
ஆனால் ஆளும் பா.ஜனதா, சிவசேனா கூட்டணி இடையே தொகுதி பங்கீடு உடன்பாடு இதுவரை ஏற்படவில்லை.
நாடாளுமன்ற தேர்தலில் அபார வெற்றி மற்றும் காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து ஆகியவற்றால் தங்களது கட்சிக்கு செல்வாக்கு கூடியிருப்பதாக பா.ஜனதா கருதுகிறது. இதனால் பா.ஜனதா கூடுதல் தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்து இருப்பதாக தெரிகிறது. அதே வேளையில் சிவசேனாவோ முதல்-மந்திரி பதவி, தொகுதி உள்பட அனைத்தையும் சரிசமமாக பிரித்துக்கொள்ளவேண்டும் என ஒற்றை காலில் நிற்பதாக தெரிகிறது.
இதனால் தொகுதி பங்கீட்டில் தொடர்ந்து இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது.
இந்தநிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை இரு கட்சி தலைவர்களும் கூட்டாக தொகுதி பங்கீடு குறித்து பத்திரிகையாளர்கள் சந்திப்பில் அறிவிப்பார்கள் என கூறப்பட்டது. ஆனால் திங்கட்கிழமை நடந்த பேச்சுவார்த்தையில் இறுதிவரை தொகுதி பங்கீடு குறித்த முடிவு எட்டப்படாத காரணத்தால் நள்ளிரவில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெறாது என தெரிவிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் பேட்டியளித்த மந்திரி சந்திரகாந்த் பாட்டீல், “முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே ஆகியோர் தொகுதி பங்கீடு குறித்து பா.ஜனதா கட்சியின் தேசிய தலைவரும், மத்திய மந்திரியுமான அமித்ஷாவுடன் பேச்சுவார்த்தை நடத்திவருகின்றனர்” என தெரிவித்தார்.
இந்தநிலையில் மத்திய மந்திரி அமித்ஷா இன்று (வியாழக்கிழமை)மும்பை வருவதாக முன்பே அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த வருகையில் தொகுதி பங்கீடு குறித்து முடிவு எட்டப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திடீரென அமித்ஷா வருகை ரத்து செய்யப்பட்டுள்ளது. தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையில் முடிவு இன்னும் எட்டப்படாத காரணத்தால் அவர் வருகையை ரத்து செய்திருக்கலாம் என கூறப்படுகிறது. தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தொகுதி பங்கீட்டில் ஏற்படும் இழுபறி இவ்விரு கட்சிகளுக்கும் பின்னடைவாக கருதப்படுகிறது.
கடந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு பிப்ரவரி மாதம் மும்பை வந்த அமித்ஷா பா.ஜனதா, சிவசேனா கூட்டணியை உறுதிசெய்து அதிகாரப்பூர்வ தகவலை அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story