கலெக்டர் அலுவலகம் முன்பு, பயிர் காப்பீட்டு தொகை வழங்கக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
பயிர் காப்பீட்டு தொகை வழங்கக்கோரி திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு, விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல்,
திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 2016-2017-ம் ஆண்டு வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் பலருக்கு, இதுவரை பயிர்காப்பீட்டு தொகை வழங்கப்படவில்லை. இதில் தொப்பம்பட்டி பகுதியில் மட்டும் 1,500 பேருக்கு காப்பீட்டுதொகை வழங்கவில்லை என்று கூறப்படுகிறது. எனவே, பயிர் காப்பீட்டு தொகை வழங்க வலியுறுத்தி, திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதற்கு சங்கத்தின் தொப்பம்பட்டி ஒன்றிய செயலாளர் கனகு தலைமை தாங்கினார். தலைவர் சின்னத்துரை, துணைத் தலைவர்கள் பொன்ராஜ், வேலுச்சாமி உள்ளிட்ட நிர்வாகிகள், விவசாயிகள் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, தொப்பம்பட்டி உள்பட மாவட்டம் முழுவதும் விடுபட்ட விவசாயிகளுக்கு பயிர்காப்பீட்டு தொகையை உடனே வழங்க வேண்டும்.
மேலும் கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியபடி ஒட்டன்சத்திரம் தாலுகா பூசாரிபட்டியில் வண்டிப்பாதை ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் பழனி தாலுகா தும்பலபட்டியில் கடந்த 1980-ம் ஆண்டு நில உச்சவரம்பு சட்டத்தின் கீழ் கையகப்படுத்தப்பட்ட 36 ஏக்கர் நிலம், நிலமில்லாத 37 பேருக்கு வழங்குவதாக உத்தரவிடப்பட்டது. ஆனால், 39 ஆண்டுகளாகியும் இதுவரை நிலத்தை அளவீடு செய்து வழங்கவில்லை. எனவே, நிலத்தை 37 பேரிடமும் ஒப்படைக்க வேண்டும்.
மேலும் தும்பலப்பட்டி பாறைப்பட்டியில் வசிக்கும் ஆதிதிராவிட மக்களுக்கு சுடுகாட்டுக்கு நிலம் ஒதுக்கி தரவேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். பின்னர் அந்த கோரிக்கைகள் தொடர்பாக மாவட்ட வருவாய் அலுவலரை சந்தித்து மனு கொடுத்தனர்.
Related Tags :
Next Story