சி.பி.ஐ. விசாரணையை கண்டு பயப்படவில்லை; முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி பேட்டி


சி.பி.ஐ. விசாரணையை கண்டு பயப்படவில்லை; முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி பேட்டி
x
தினத்தந்தி 26 Sep 2019 11:49 PM GMT (Updated: 26 Sep 2019 11:49 PM GMT)

தொலைபேசி ஒட்டுகேட்பு விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணையை கண்டு பயப்படவில்லை என்று குமாரசாமி கூறினார்.

பெங்களூரு,

கர்நாடகத்தில் குமாரசாமி தலைமையிலான கூட்டணி ஆட்சியின் போது நடந்ததாக கூறப்படும் தொலைபேசி ஒட்டுகேட்பு புகார் குறித்து சி.பி.ஐ. விசாரணை தொடங்கியுள்ளது. சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்று பெங்களூருவில் போலீஸ் அதிகாரி அலோக்குமார் வீட்டில் சோதனை நடத்தினர்.

இந்த நிலையில் ஜனதா தளம்(எஸ்) கட்சியின் உயர்மட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் பெங்களூரு சேஷாத்திரிபுரத்தில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி வந்தார். அவரிடம் சி.பி.ஐ. சோதனை குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பதிலளித்து நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

தொலைபேசி ஒட்டுகேட்பு புகார் தொடர்பாக போலீஸ் அதிகாரி அலோக்குமார் வீட்டில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்துவதாக தகவல் வந்துள்ளது. யாரிடம் வேண்டுமானாலும் விசாரணை நடத்தட்டும். சி.பி.ஐ. விசாரணையை கண்டு பயப்படவில்லை. கர்நாடகத்தில் இதுவரை நடந்த ஆட்சிகளில் என்னென்ன நடந்தது என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும்.

அலோக்குமார் வீட்டில் சோதனை நடப்பதற்கும், எனக்கும் தொடர்பு இல்லை. அதுபற்றி என்னிடம் ஏன் வந்து கேள்வி கேட்கிறீர்கள். மூத்த ஐ.பி.எஸ். அதிகாரியான அலோக்குமார் இப்போதும் நேர்மையான அதிகாரி.

இவ்வாறு குமாரசாமி கூறினார்.

இந்த விவகாரம் குறித்து முன்னாள் பிரதமர் தேவே கவுடா கூறும்போது, “சி.பி.ஐ. அதிகாரிகள் தங்களின் பணியை செய்கிறார்கள். அதுபற்றி நான் ஒன்றும் கருத்து சொல்ல முடியாது. யார்-யாரிடம் விசாரணை நடத்துகிறார்களோ? நடத்தட்டும். இதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பது எனக்கு தெரியாது“ என்றார்.

Next Story