ஜி.எஸ்.டி. பரிந்துரை செய்த ரூ.40 லட்சம் வரை விலக்கு அளிக்க வேண்டும்; நாராயணசாமியிடம், வியாபாரிகள் கோரிக்கை


ஜி.எஸ்.டி. பரிந்துரை செய்த ரூ.40 லட்சம் வரை விலக்கு அளிக்க வேண்டும்; நாராயணசாமியிடம், வியாபாரிகள் கோரிக்கை
x
தினத்தந்தி 29 Sep 2019 11:00 PM GMT (Updated: 29 Sep 2019 1:10 PM GMT)

ஜி.எஸ்.டி. கவுன்சில் பரிந்துரையின்படி ரூ.40 லட்சம் வரை விலக்கு அளிக்க வேண்டும் என்று முதல்–அமைச்சர் நாராயணசாமியிடம், வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதுச்சேரி,

புதுச்சேரி வணிகர்கள் சங்க தலைவர் சிவசங்கர் மற்றும் நிர்வாகிகள் முதல்–அமைச்சர் நாராயணசாமியை சந்தித்து ஒரு கோரிக்கை மனுவை அளித்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:–

ஆண்டிற்கு ரூ.20 லட்சம் வரை வியாபாரம் செய்யும் வணிகர்கள் சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) சட்டத்தின் கீழ் பதிவு செய்ய சிறு வியாபாரிகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டிருந்தது. இதனை ரூ.40 லட்சமாக உயர்த்த ஜி.எஸ்.டி. கவுன்சில் பரிந்துரை செய்து முடிவு செய்யும் அதிகாரத்தை மாநில அரசுக்கு தந்தது.

அதன்படி தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் ரூ.40 லட்சம் வரை வரி விலக்கு அளித்து நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளன. புதுச்சேரியிலும் இதனை அமல்படுத்த வேண்டும்.

ஜி.எஸ்.டி.யில். ரூ.40 லட்சமாக வரி விலக்கு அளிக்கப்பட்டால் சிறு வியாபாரிகள் பலனடைவார்கள். ஒரே வரி என்ற நிலையால் புதுவையில் இருந்து பொருட்கள் வாங்குபவர்கள் எண்ணிக்கை கணிசமாக குறைந்துவிட்டது.

இதனால் 15 ஆயிரத்திற்கு மேற்பட்ட சிறு வியாபாரிகள் மற்றும் 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட ஊழியர்களின் குடும்பங்கள் வாழ்வாதாரங்கள் கேள்விக்குறியாகிவிட்டது. இதனை கருத்தில் கொண்டு புதுச்சேரியில் ரூ.40 லட்சம் வரை வியாபாரம் செய்யும் சிறு வியாபாரிகளுக்கு ஜி.எஸ்.டி. வரியில் இருந்து விலக்கு அளித்து பாதுகாக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story