முதுமையடைந்து விட்டால் கூட கோல் ஊன்றி பொதுமக்களுக்காக போராடுவேன் - பொதுக்கூட்டத்தில் ராமதாஸ் பேச்சு


முதுமையடைந்து விட்டால் கூட கோல் ஊன்றி பொதுமக்களுக்காக போராடுவேன் - பொதுக்கூட்டத்தில் ராமதாஸ் பேச்சு
x
தினத்தந்தி 29 Sep 2019 11:00 PM GMT (Updated: 29 Sep 2019 6:22 PM GMT)

முதுமையடைந்து விட்டால் கூட கோல் ஊன்றி சென்று பொதுமக்களுக் காக போராடுவேன் என்று ராணிப்பேட்டையில் நடந்த பொதுக்கூட்டத்தில் டாக்டர் ராமதாஸ் கூறினார்.

சிப்காட்( ராணிப்பேட்டை),

ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் என 3 மாவட்டங்களை உருவாக்க போராடிய பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கு ஒருங்கிணைந்த வேலூர் கிழக்கு மாவட்ட பா.ம.க. சார்பில் பாராட்டு விழா பொதுக்கூட்டம் ராணிப்பேட்டை முத்துக்கடையில் நடைபெற்றது.

கூட்டத்துக்கு மாநில வன்னியர் சங்க செயலாளர் எம்.கே.முரளி தலைமை தாங்கினார். மாநில துணை பொதுசெயலாளர் கே.எல்.இளவழகன், கிழக்கு மாவட்ட செயலாளர் அ.ம.கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில துணை பொது செயலாளர் வக்கீல் சரவணன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

வேலூர் மாவட்டத்தை பிரிக்க பல்வேறு போராட்டங்களை நடத்தி, வெற்றி பெற்றுள்ளோம். இந்த மாவட்ட மக்களின் நலனுக்காக 120 கிலோ மீட்டர் தூரத்தை சைக்கிளில் பயணம் செய்தேன். ஒரு நாளைக்கு 40 கிலோ மீட்டர் தூரம் என 3 நாட்கள் சைக்கிள் பயணத்தை பசுமை தாயகம் சார்பில் மேற்கொண்டேன்.

தோல் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரை எதிர்த்து போராட்டம் நடத்தினேன். கழிவுநீரை வெளியேற்றுவதை சிமெண்டு வைத்து அடைத்து போராட்டம் நடத்தினேன். பொதுமக்கள் பயன்படுத்தும் குடிநீர் பாழாவதை பொறுத்துக்கொள்ள முடியாமல் இதை செய்தேன். அதிகமாக பொய் சொன்ன கட்சிக்கு பொதுமக்கள் ஓட்டு போடுகிறார்கள். மக்களுக்காக யார் போராடுகிறார் என்பது மக்களுக்கு தெரியவில்லை. நாம் தனித்து நின்ற போது மக்கள் நம்மை வெற்றி பெற செய்யவில்லை.

சோளிங்கர், அணைக்கட்டு, ஆற்காடு போன்ற வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளில் கூட மக்கள் வாக்களித்து நம்மை வெற்றி பெற செய்யவில்லை. இதை பா.ம.க.வினர் கண்டுபிடித்து அதற்கேற்றவாறு செயல்பட வேண்டும். பா.ம.க.வினர் மக்களிடம் சென்று நம் சாதனைகளை கூற வேண்டும்.

பா.ம.க.விற்கு வாக்களித்தால் விவசாயம் செழிக்கும், சுகாதாரம் முன்னேற்றம் அடையும். பல்வேறு நல்ல திட்டங்களை மக்களுக்காக நாங்கள் கொடுப்போம். நான் நினைத்திருந்தால் எத்தனை பெரிய பதவிக்கும் சென்றிருக்க முடியும். முதுமையடைந்து விட்டால் கூட ஊன்று கோல் ஊன்றி சென்று உங்களுக்காக போராடுவேன்.

முதல் - அமைச்சருக்கு நன்றி

வேலூர் மாவட்ட மக்களுக்காக பல்வேறு போராட்டங்களை நடத்திய கட்சி பா.ம.க. வேலூர் மாவட்டத்தை 3 ஆக பிரித்த முதல் - அமைச்சருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

வேலூர் மாவட்டத்தை 3 ஆக பிரித்தது போல் திருவண்ணாமலை, சேலம், கோவை, மதுரை, கடலூர் ஆகிய மாவட்டங்களையும் பிரிக்க வேண்டும்.

இவ்வாறு டாக்டர் ராமதாஸ் பேசினார்.

முன்னதாக பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கு வீரவாள் பரிசு அளிக்கப்பட்டது. கூட்டத்தில் பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் தலைவர் தீரன், வன்னியர் சங்க முதன்மை செயலாளர் பு.தா.அருள்மொழி, முன்னாள் மத்திய மந்திரி என்.டி.சண்முகம், மாவட்ட தலைவர்கள் ஆறுமுகம், ஜெகன்நாதன், மாநில மாணவர் சங்க செயலாளர் பிரபு, மாநில வன்னியர் சங்க துணைத்தலைவர் புல்லட்.ராதாகிருஷ்ணன், மாநில இளைஞர் சங்க துணை செயலாளர் ப.சரவணன், மாநில துணை அமைப்பு செயலாளர் தங்கதுரை, சிறப்பு மாவட்ட செயலாளர் நல்லூர் சண்முகம், மாநில பசுமை தாயக துணை செயலாளர் மகேந்திரன், மாவட்ட வன்னியர் சங்க செயலாளர் எம்.எஸ்.மோகன்தாஸ், மாநில இளைஞர் சங்க துணைத்தலைவர் பகவான் கார்த்தி, முன்னாள் ஒன்றிய செயலாளர் பூண்டி மோகன், மாநில சட்ட பாதுகாப்பு குழு துணை செயலாளர் சக்கரவர்த்தி, மாநில சமூக நீதி பேரவை துணை செயலாளர் வக்கீல் ஜானகிராமன், மாநில உழவர் பேரியக்க துணை செயலாளர் சண்முகம், மாநில இளம் பெண்கள் சங்க செயலாளர் ஜி. உமா மகேஸ்வரி, அரக்கோணம் கிழக்கு ஒன்றிய செயலாளர் எஸ்.சத்தியராஜ், மாவட்ட அமைப்பு செயலாளர் கார்த்திக்ராஜா, மாவட்ட துணை செயலாளர்கள் ஆ.வடிவேல், சிவப்பிரகாசம், செல்வம், எல்.வி.மணி, மாவட்ட துணைத்தலைவர் கிரிகுமரன், மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் சித்திக்பாஷா, ராணிப்பேட்டை நகர தலைவர் கஜேந்திரன், செயலாளர் பூபாலன், அமைப்பு செயலாளர் ரத்னகுமார் உள்பட மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் மற்றும் கிளை பா.ம.க. பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர். முடிவில் வாலாஜா மேற்கு ஒன்றிய செயலாளர் பாரத் நன்றி கூறினார்.

Next Story