தூத்துக்குடியில் இஸ்ரோ தளம் அமைக்கப்படும் - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்


தூத்துக்குடியில் இஸ்ரோ தளம் அமைக்கப்படும் - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
x
தினத்தந்தி 29 Sep 2019 11:15 PM GMT (Updated: 29 Sep 2019 7:32 PM GMT)

தூத்துக்குடியில் இஸ்ரோ தளம் அமைக்கப்படும் என மதுரையில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.

மதுரை,

மதுரை வேலம்மாள் கல்லூரியில் பிளஸ்-2 மாணவர்களுக்கு, தேர்வில் வெற்றி பெறும் வகையில் திறன்மேம்பாட்டு பயிற்சி முகாம் மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. முகாமை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்து, கலைநிகழ்ச்சியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கினார்.

இதைதொடர்ந்து அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது:-

தொலைக்காட்சிகள், செல்போன்கள் போன்றவற்றை மாணவர்கள் தேர்வு நேரங்களில் பார்க்க கூடாது. ஏனென்றால் உங்களுக்கு படிப்பின் மீது அக்கறை வராது. பொதுவாக உங்களிடத்தில் மனம் ஒன்று சொல்லும், எண்ணங்கள் வேறு எதையோ செய்யும். காலையில் 5 மணிக்கு எழுந்து படிக்க வேண்டும் என்று மனம் சொல்லும். ஆனால் நமது எண்ணமோ காலையில் 5 மணிக்கு பதில் 6 மணிக்கு எழுந்திருக்கலாம் என நினைக்கும். இந்த இரண்டையும் நாம் கட்டுப்படுத்தினால் நம்மை நாமே வழிநடத்த முடியும்.

தேர்வு எழுதும்போது நம்பிக்கையுடனும், பதற்றமில்லாமல் உங்களை தயார்படுத்தி கொள்ள வேண்டும். அதற்கு இந்த திறன் மேம்பாட்டு பயிற்சி உங்களுக்கு உதவும். இந்த முகாம் முதல் கட்டமாக நடைபெறுகிறது. இதனை தொடர்ந்து 10-ம் வகுப்பு மற்றும் 11-ம்வகுப்பு மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் இஸ்ரோவில் பல்வேறு சாதனைகளை உலகிற்கு நிரூபித்துக்காட்டினார். தூத்துக்குடி மாவட்டத்தில் இஸ்ரோ தளம் அமைக்க முதல்-அமைச்சர் முயற்சி எடுத்து வருகிறார். அதற்குரிய நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. உங்களை போன்ற மாணவர்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் மதுரை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.சரவணன், முதன்மை கல்வி அலுவலர் சுவாமிநாதன், தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க முதுநிலை தலைவர் ரத்தினவேல், தலைவர் ஜெகதீசன், அம்மா சேரிடபிள் டிரஸ்டு செயலாளர் பிரியதர்ஷினி, இயக்குனர் தனலெட்சுமி, பட்டிமன்ற பேச்சாளர் மணிகண்டன், புலவர் சங்கரலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த முகாமில் 40 பள்ளிகளில் இருந்து 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

Next Story