தமிழர்களுக்கு வேலை வழங்கக்கோரி மதுரை ரெயில் நிலையத்தை முற்றுகையிட முயன்ற 210-பேர் கைது


தமிழர்களுக்கு வேலை வழங்கக்கோரி மதுரை ரெயில் நிலையத்தை முற்றுகையிட முயன்ற 210-பேர் கைது
x
தினத்தந்தி 2 Oct 2019 4:15 AM IST (Updated: 2 Oct 2019 4:04 AM IST)
t-max-icont-min-icon

தமிழர்களுக்கு வேலை வழங்கக் கோரி மதுரை ரெயில் நிலையத்தை முற்றுகையிட முயன்ற 210-க் கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

மதுரை,

மதுரை ரெயில்வே கோட்டத்தில் காலியாக இருந்த இருப்புப்பாதை தொடர்பான பணியிடங்களுக்கு வடமாநிலத்தை சேர்ந்த 300-க்கும் மேற்பட்டோர் தேர்வு செய்யப்பட்டனர். அதில் தமிழகத்தை சேர்ந்த 10-க்கும் குறைவானவர்களே தேர்வானார்கள். இது மாநிலம் முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் தமிழகத்தில் ரெயில்வே துறையில் தமிழக இளைஞர்கள் புறக்கணிக்கப்படுவதாகவும், வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் அதிக அளவில் பணியமர்த்தப்படுவதாகவும் புகார்கள் எழுந்தன.

எனவே ரெயில்வே துறையில் தமிழர்களுக்கு வேலை வழங்கக் கோரி தந்தை பெரியார் திராவிடர் கழகம், ஆதித்தமிழர் பேரவையினர், தமிழ்ப்புலிகள் அமைப்பினர் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட அமைப்பை சேர்ந்த 250-க்கும் மேற்பட்டவர்கள் நேற்று மதுரை பெரியார் பஸ்நிலையம் அருகே திரண்டனர்.

அவர்கள் மத்திய அரசு மற்றும் ரெயில்வே நிர்வாகத்தை கண்டித்து மதுரை ரெயில் நிலையம் நோக்கி ஊர்வலமாக புறப்பட்டனர். அப்போது அங்கு பாதுகாப்பிற்கு இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினார்கள். பின்னர் அவர்களை அங்கிருந்து செல்லுமாறு போலீசார் எச்சரித்தனர்.

ஆனால் அதையும் மீறி அவர்கள் ரெயில் நிலையத்திற்கு செல்ல முயன்றதால் 210-க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர். இதில் பெரியார் திராவிடர் கழக மாநில பொது செயலாளர் ராமகிருஷ்ணன், மாவட்ட துணை தலைவர் மாயாண்டி, மாவட்ட அமைப்பாளர் தமிழ்பித்தன், மாவட்ட செயலாளர் சேகர், துணை செயலாளர் கிட்டுராஜா ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story