கூடலூர்-மலப்புரம் மலைப்பாதையில், கனரக வாகன போக்குவரத்து தொடங்கியது - பொதுமக்கள் மகிழ்ச்சி
கூடலூர்-மலப்புரம் மலைப்பாதையில் கனரக வாகன போக்குவரத்து தொடங்கி உள்ளது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
கூடலூர்,
கூடலூரில் கடந்த ஆகஸ்டு மாதம் 8-ந் தேதி கனமழை கொட்டி தீர்த்தது. அப்போது நிலச்சரிவு ஏற்பட்டு கூடலூர்-மலப்புரம், கூடலூர்-கோழிக்கோடு மலைப்பாதைகள் துண்டிக்கப்பட்டன. இதனால் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. பின்னர் 1 வாரத்துக்கு பிறகு கூடலூர்-கோழிக்கோடு மலைப்பாதை சீரமைக்கப்பட்டு, போக்குவரத்து தொடங்கியது.
ஆனால் கூடலூர்-மலப்புரம் மலைப்பாதையில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள முடியாத வகையில் ராட்சத பாறைகள் உருண்டு விழுந்து கிடந்தன. அந்த இடங்கள் கேரள மாநிலத்துக்கு உட்பட்டவை என்பதால், தமிழக அதிகாரிகளால் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள முடியவில்லை. இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு கேரள நெடுஞ்சாலைத்துறை மற்றும் பொதுப்பணித்துறையினர் பொக்லைன் எந்திரம் மூலம் கூடலூர்-மலப்புரம் மலைப்பாதையில் கிடந்த மண், மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். மேலும் பாறைகள் வெடி வைத்து தகர்க்கப்பட்டு, அப்புறப்படுத்தப்பட்டன. இதன் காரணமாக மலைப்பாதையின் ஒருபுறம் வழியாக இலகு ரக வாகனங்கள் இயக்கப்பட்டன.
இதற்கிடையில் கேரள அதிகாரிகள் மலைப்பாதையை ஆய்வு செய்தனர். அப்போது கனரக வாகனங்கள் இயக்க முடியாத வகையில் மலைப்பாதை மோசமாக இருப்பது தெரியவந்தது. இதனால் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க பஸ்கள், லாரிகள் உள்ளிட்ட கனரக வாகனங்களை இயக்க தொடர்ந்து தடை விதித்தனர். இருப்பினும் தற்காலிகமாக கூடலூர்-மலப்புரம் மலைப்பாதையில் வழிக்கடவு தர்கா பகுதியில் சிமெண்டு பாலம் கட்டி கனரக வாகனங்களை இயக்க முடிவு செய்தனர். மேலும் மலைப்பாதை சீரமைப்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தன. இதற்கிடையில் மலைப்பாதையை விரைவாக சீரமைத்து கனரக வாகன போக்குவரத்துக்கு அனுமதிக்கக்கோரி கேரளா, கூடலூர் பகுதியில் போராட்டங்கள் நடைபெற்றது.
இந்த நிலையில் கூடலூர்-மலப்புரம் மலைப்பாதையில் கனரக வாகனங்களை இயக்கும் வகையில் கேரள அதிகாரிகள் பணிகளை முடித்து உள்ளனர். இதன் காரணமாக நேற்று முதல் அந்த வழியே கனரக வாகன போக்குவரத்து தொடங்கி உள்ளது. மேலும் கர்நாடக அரசு பஸ்சும் கூடலூர் வழியாக மலப்புரத்துக்கு இயக்கப்பட்டது. இதேபோன்று கேரள அரசு பஸ்களை இயக்குவதற்கான நடவடிக்கையில் அம்மாநில அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். கடந்த 2 மாதங்களுக்கு பிறகு கூடலூர்-மலப்புரம் மலைப்பாதையில் கனரக வாகன போக்குவரத்து தொடங்கி உள்ளதால் கூடலூர், மலப்புரம் பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
இதுகுறித்து கேரள அதிகரிகள் கூறும்போது, தற்காலிகமாக கனரக வாகனங்களை இயக்கும் வகையில் மலைப்பாதை சீரமைக்கப்பட்டு உள்ளது. அரசு போதிய நிதி ஒதுக்கியவுடன் தேவையான இடங்களில் பாலம் கட்டப்படும். முன் எச்சரிக்கை நடவடிக்கையாக அதிக பாரம் ஏற்றி வரும் சரக்கு லாரிகளுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது என்றனர்.
Related Tags :
Next Story