தி.மு.க.வை ஆட்சிக்கு வரவிடாமல் தடுப்பது தான் முதல் வேலை - டி.டி.வி.தினகரன் பேச்சு
‘தி.மு.க.வை ஆட்சிக்கு வரவிடாமல் தடுப்பது தான் முதல் வேலை’ என்றும் தேனியில் நடந்த கூட்டத்தில் டி.டி.வி.தினகரன் பேசினார்.
தேனி,
தேனி மாவட்ட அ.ம.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், தேனியை அடுத்துள்ள பழனிசெட்டிபட்டியில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட செயலாளர் முத்துச்சாமி தலைமை தாங்கினார். அமைப்பு செயலாளர் டாக்டர் கதிர்காமு வரவேற்றார்.
இதில் அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு பேசினார். அவர் பேசும்போது கூறியதாவது:-
தங்களை பரம்பரை அ.தி.மு.க. என்று சொல்லிக் கொண்டு எங்களுடன் இருந்த சிலர் இன்றைக்கு எங்கே இருக்கிறார்கள் என்பது உங்களுக்கு தெரியும். அவர்கள் பேசுவதற்கும், அவர்களின் இதயத்தில் இருப்பதற்கும் சம்பந்தம் இல்லை. பதவிக்கு வந்தபிறகு தான் தங்களின் சுயரூபத்தை காட்டுகிறார்கள்.
நான் நினைத்து இருந்தால் 2001-ம் ஆண்டே சசிகலா உதவியுடன் முதல்-அமைச்சராகி இருக்க முடியும். ஆனால், என்னிடம் சுயநலம் கிடையாது. நாடாளுமன்ற தேர்தலில் ஏற்பட்ட தோல்வியால் அ.ம.மு.க. அழிந்து விட்டது என்று சிலர் கூறுகிறார்கள். இந்த இயக்கம் எம்.ஜி.ஆர். தொடங்கிய இயக்கம் போல் மிகப்பெரிய பெற்றி பெறும்.
நம்மால் பதவி பெற்றவர்கள் இன்றைக்கு வசதி பெற்றவர்களாக இருக்கலாம். இன்றைக்கு அவர்கள் எப்படி இருக்கிறார்கள் என்பது உங்களுக்கு தெரியும். ஆட்சி இல்லை என்றால் அவர்கள் அனைவரும் காணாமல் போய்விடுவார்கள்.
எங்களுக்கு உண்மையான எதிரி தி.மு.க. தான். தி.மு.க.வை ஆட்சிக்கு வர விடாமல் தடுப்பது தான் முதல் வேலை. ஜெயலலிதாவின் இயக்கத்தை மீட்டெடுக்க வேண்டிய காலத்தின் கட்டாயமாக தான் அ.ம.மு.க. தொடங்கப்பட்டது. அ.தி.மு.க.வை எப்பாடுபட்டாவது மீட்டெடுப்போம்.
ஜெயலலிதாவின் ஆட்சியை மீண்டும் தமிழகத்தில் கொண்டு வருவோம். யாரோ சிலர் இயக்கத்தை விட்டு செல்வதால் இழப்பு இல்லை. இது தொண்டர்கள் இயக்கம். யாரும் அசைக்கவோ, வீழ்த்தவோ முடியாது. இன்னும் 5 தேர்தல்கள் வந்தாலும் போராடும் சக்தி எங்களிடம் உள்ளது. தமிழகத்தில் முதன்மையான கட்சியாக அ.ம.மு.க. வரும். கட்சியை பதிவு செய்வதற்கு ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டுள்ளது. நிச்சயம் கட்சியை பதிவு செய்து நிலையான சின்னம் பெற்று தேர்தலை எதிர்கொள்வோம். உள்ளாட்சி தேர்தல் நடந்தால் முழுமையாக வெற்றி பெறுவோம். இவ்வாறு அவர் பேசினார்.
Related Tags :
Next Story