கடையம் அருகே பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்: வீரத்தம்பதி விரட்டியடித்த 2 கொள்ளையர்கள் கைது


கடையம் அருகே பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்: வீரத்தம்பதி விரட்டியடித்த 2 கொள்ளையர்கள் கைது
x
தினத்தந்தி 3 Oct 2019 10:30 PM GMT (Updated: 3 Oct 2019 8:33 PM GMT)

கடையம் அருகே கொள்ளையடிக்க வந்தபோது வீரத்தம்பதியினர் விரட்டியத்த 2 கொள்ளையர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து துப்பாக்கி, அரிவாள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

கடையம், 

நெல்லை மாவட்டம் கடையம் அருகே உள்ள கல்யாணிபுரத்தை சேர்ந்தவர் சண்முகவேல் (வயது 72), விவசாயி. இவருடைய மனைவி செந்தாமரை (65). இவர்களுக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். அவர்கள் அனைவரும் வெளியூரில் வசித்து வருகிறார்கள். சண்முகவேல் தனது மனைவியுடன் கல்யாணிபுரம் மெயின் ரோட்டில் தோட்டத்துடன் கூடிய பண்ணை வீட்டில் வசித்து வருகிறார்.

கடந்த ஆகஸ்டு மாதம் 11-ந்தேதி இரவு சுமார் 10 மணியளவில் வயதான தம்பதி இருவரும் வீட்டு வராண்டாவில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது செந்தாமரை தண்ணீர் எடுப்பதற்காக வீட்டுக்குள் சென்றபோது, எலுமிச்சை தோட்டத்தில் மறைந்திருந்த முகமூடி அணிந்த கொள்ளையன் ஒருவன் சண்முகவேலுவின் பின்புறமாக வந்து துண்டால் அவரது கழுத்தை இறுக்கினான்.

சத்தம் கேட்டதும் செந்தாமரை வீட்டுக்குள் இருந்து வெளியே ஓடி வந்தார். அவர் தனது கணவரை கொள்ளையன் தாக்குவதை பார்த்ததும் அருகில் கிடந்த காலணிகள், சேர், ஸ்டூல் உள்ளிட்டவற்றை எடுத்து அவனை தாக்கினார். அதற்குள் இன்னொரு முகமூடி கொள்ளையன் வந்ததையடுத்து இருவரையும் தம்பதியினர் தாக்கினர். கொள்ளையர்கள் அரிவாளால் தாக்க முயன்றபோதிலும் அதை கண்டு அஞ்சாமல், கையில் கிடைத்த பொருட்களை எல்லாம் கொண்டு தம்பதியினர் தொடர் தாக்குதல் நடத்தவே, அதை சமாளிக்க முடியாமல் கொள்ளையர்கள் பின்வாங்கி தப்பி ஓடி விட்டனர்.

இந்த சம்பவத்தின்போது செந்தாமரை அணிந்திருந்த 4¾ பவுன் தாலி சங்கிலியை மட்டும் கொள்ளையர்கள் பறித்து சென்று விட்டனர். ஆயுதங்களுடன் வந்த கொள்ளையர்களை வயதான தம்பதியினர் துணிச்சலுடன் விரட்டியடித்த சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. வீரத்தம்பதிக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுகள் குவிந்தது. பிரபலங்கள் பலரும் பாராட்டு தெரிவித்தனர். மேலும் தமிழக அரசும் வீரத்தம்பதிக்கு விருது வழங்கி கவுரவித்தது.

இந்த நிலையில், கொள்ளையர்களை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் சக்திகுமார் உத்தரவின்படி, துணை போலீஸ் சூப்பிரண்டுகள் ஜாகிர் உசேன், சுகாஷினி ஆகியோர் தலைமையில், கடையம் இன்ஸ்பெக்டர் ஆதிலட்சுமி, 2 இன்ஸ்பெக்டர்கள், 5 சப்-இன்ஸ்பெக்டர்கள், 34 போலீசாரை கொண்டு 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்த தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

நேற்று முன்தினம் கீழக்கடையம் ரெயில் நிலையம் அருகில் சந்தேகப்படும்படியாக நின்ற 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் அவர்கள், கல்யாணிபுரத்தை சேர்ந்த மாடசாமி மகன் பாலமுருகன் (30), தூத்துக்குடி மாவட்டம் சவாலாப்பேரி மேற்கு தெருவை சேர்ந்த பெருமாள் (54) ஆகியோர் என்பதும், வயதான தம்பதியை தாக்கி கொள்ளையடித்தது இவர்கள்தான் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து 2 கொள்ளையர்களையும் போலீசார் கைது செய்தனர்.

இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் சக்திகுமார் நேற்று மதியம் கடையம் போலீஸ் நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

கடையம் அருகே தம்பதியை தாக்கி நடந்த கொள்ளை சம்பவத்தில் பாலமுருகன், பெருமாள் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்து உள்ளனர். அதில் பாலமுருகன் மீது பல்வேறு மாவட்டங்களில் 38 வழக்குகளும், பெருமாள் மீது 8 வழக்கு களும் நிலுவையில் உள்ளன. அவர்களிடம் இருந்து 2 அரிவாள்கள், ஒரு துப்பாக்கி, குல்லா, கையுறை, 35 கிராம் தங்க நகை ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு இருக்கின்றன.

இவர்கள் 2 பேரும் கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றுவதற்கு 2 நாட்களுக்கு முன்பே அங்கு நோட்டமிட்டு, அருகில் உள்ள தோப்பில் இருந்து துப்பாக்கி மற்றும் அரிவாள்களை திருடி உள்ளனர். அந்த தம்பதியிடம் கொள்ளையடித்த பின்னர், புலவனூரில் உள்ள ஒரு வீட்டுக்குள் புகுந்து வள்ளி என்பவரிடம் 2½ பவுன் தங்கச்சங்கிலியையும் பறித்து உள்ளனர். தனிப்படை போலீசார் திறமையாக செயல்பட்டு கொள்ளையர்களை பிடித்து கைது செய்து உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் அவர், இந்த வழக்கில் சிறப்பாக செயல்பட்டு துப்பு துலக்கி கொள்ளையர்களை கைது செய்த தனிப்படை போலீசாருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி கவுரவித்தார்.

Next Story