நடப்பு ஆண்டில் ரூ.1¼ கோடிக்கு கதர் ஆடைகளை விற்க இலக்கு - கலெக்டர் கதிரவன் தகவல்
ஈரோடு மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் ரூ.1¼ கோடிக்கு கதர் ஆடைகளை விற்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாக கலெக்டர் சி.கதிரவன் கூறினார்.
ஈரோடு,
ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு, கோபிசெட்டிபாளையம், சத்தியமங்கலம், பெருந்துறை ஆகிய 4 இடங்களில் காதி கிராப்ட் விற்பனை நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. ஈரோடு கச்சேரிவீதியில் உள்ள காதி கிராப்ட் விற்பனை நிலையத்தில் காந்தி பிறந்தநாள் விழா மற்றும் சிறப்பு தள்ளுபடி விற்பனை தொடக்க விழா நேற்று முன்தினம் காலை நடந்தது. விழாவுக்கு ஈரோடு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் தலைமை தாங்கி காந்தி உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் சிறப்பு தள்ளுபடி விற்பனையை தொடங்கி வைத்து கதர் ஆடைகளை பார்வையிட்டார்.
அப்போது அவர் கூறியதாவது:-
ஈரோடு மாவட்டத்தில் 11 கிராமிய நூல் உற்பத்தி நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதன்மூலம் கடந்த ஆண்டு ரூ.57 லட்சத்து 22 ஆயிரம் மதிப்பிலான கதர் மற்றும் பாலிஸ்டர் நூல் உற்பத்தி செய்யப்பட்டது. இதேபோல் மாவட்டத்தில் உள்ள 3 கதர் உற்பத்தி நிலையங்கள் மூலம் ரூ.95 லட்சத்து 85 ஆயிரம் மதிப்பிலான துணிகள் உற்பத்தி செய்யப்பட்டு உள்ளது.
காதிகிராப்ட் விற்பனை நிலையங்களில் கடந்த 2018-2019-ம் ஆண்டில் கதர் ஆடைகளை விற்பனை செய்ய ரூ.1 கோடியே 22 லட்சம் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. இதில் ரூ.95 லட்சத்து 43 ஆயிரத்துக்கு கதர் ஆடைகள் விற்பனையானது. இதேபோல் நடப்பு ஆண்டில் ரூ.1 கோடியே 21 லட்சம் கதர் ஆடைகளை விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. மேலும் கதர் வாரிய அலகுகளில் உற்பத்தி செய்யப்படும் சலவை சோப்புகள், குளியல் சோப்புகள், காலணிகள், ஊதுபத்தி, சந்தனமாலைகள், வலி நிவாரணி, தேன் உள்ளிட்ட பொருட்களை ரூ.2 கோடியே 75 லட்சத்துக்கு விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இவ்வாறு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் கூறினார்.
விழாவில் கதர் கிராமத்தொழில் வாரிய கண்காணிப்பாளர் கே.விஜயகுமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story