குடிநீர் இணைப்புக்காக, குழாய் பதிக்க தோண்டிய குழிகளை சரியாக மூடாததால் வாகன ஓட்டிகள் அவதி
கோவை மாநகர பகுதியில் குடிநீர் இணைப்புக்காக குழாய் பதிக்க தோண்டப்பட்ட குழிகளை சரியாக மூடாததால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகிறார்கள். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை,
கோவை மாநகர பகுதி மக்களுக்கு சிறுவாணி, பில்லூர், ஆழியாறு ஆகிய அணைகளில் இருந்து தண்ணீர் எடுக்கப்பட்டு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகின்றன. இதில் பெரும்பாலான இடங்களுக்கு 3 நாட்களுக்கு ஒருமுறையும், சில இடங்களில் வாரத்துக்கு ஒருமுறையும் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.
கோவைக்கு குடிநீர் எடுக்கும் அணைகளில் போதுமான அளவுக்கு தண்ணீர் இருப்பதால், புதிதாக குடிநீர் கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு கடந்த மாதம் 23-ந் தேதியில் இருந்து குடிநீர் இணைப்புகள் வழங்கப்படும் என்று தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிவித்தார்.
வீடுகளுக்கு இணைப்பு வழங்கும்போது சாலையை தோண்டக்கூடாது என்றும், நவீன கருவி மூலம் சாலையின் கீழ்ப்பகுதியில் துளையிட்டு குழாய் பொருத்த வேண்டும் என்றும் கூறினார். ஆனால் பல இடங்களில் சாலையில் குழி தோண்டிதான் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது.
குறிப்பாக கோவை புரூக் பாண்ட் ரோட்டில் உள்ள சிரியன் சர்ச் சாலையில் 300 மீட்டர் தூரத்தில் மட்டும் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் சாலைகளின் குறுக்கே குடிநீர் குழாய் பதிக்க குழி தோண்டப்பட்டு உள்ளது. அவற்றை முறையாக மூடாததால் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-
வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு கொடுக்க சாலையை தோண்டிவிட்டு அவற்றை சரியாக மூடாமல் செல்கிறார்கள். இதனால் அந்த வழியாக இருசக்கர வாகனங்களில் செல்லும்போது கடும் அவதி ஏற்பட்டு வருகிறது. இரவு நேரத்தில் அங்கு குழி இருப்பது தெரியாததால் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் தவறி கீழே விழுந்து காயமடைந்து வருகின்றனர்.
புதிதாக போடப்பட்ட சாலையை தோண்டி உள்ளதால் அவை மீண்டும் குண்டும், குழியுமான சாலையாக மாறிவிட்டது. எனவே சாலையை தோண்டாமல் நவீன கருவி மூலம் குழாய் பொருத்தவும், ஏற்கனவே தோண்டப்பட்ட இடத்தில் குழியை சரியாக மூடவும் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story