உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் வெளியீடு - கரூர் மாவட்டத்தில் 8,62,021 வாக்காளர்கள்
உள்ளாட்சி தேர்தலையொட்டி வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியல் படி கரூர் மாவட்டத்தில் 8,62,021 வாக்காளர்கள் உள்ளனர் என கலெக்டர் அன்பழகன் தெரிவித்து உள்ளார்.
கருர்,
கரூர் மாவட்டத்திலுள்ள ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடத்துவதற்கான புகைப்படத்துடன் கூடிய இறுதி வாக்காளர் பட்டியலை கரூர் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான அன்பழகன் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்துக்கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிட்டார். கரூர் மாவட்டத்தைப்பொறுத்தவரை, கரூர் மற்றும் குளித்தலை ஆகிய இரண்டு நகராட்சிகளும், 11 பேரூராட்சிகளும், 8 ஊராட்சி ஒன்றியங்களும் உள்ளன. இதில், இரண்டு நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 96,419 ஆண்களும், 1,04,503 பெண்களும், இதர வாக்காளர்கள் 4 பேரும் வாக்காளர்களாக உள்ளனர். பேரூராட்சிகளுக்குட்பட்ட பகுதிகளில் 61,842 ஆண்களும், 65,960 பெண்களும், இதர வாக்காளர் ஒருவரும் வாக்காளர்களாக உள்ளனர். அதேபோல ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட பகுதிகளில் 2,60,091 ஆண்களும், 2,73,149 பெண்களும் இதர வாக்காளர்கள் 52 பேரும் வாக்காளர்களாக உள்ளனர். ஆகமொத்தம், கரூர் மாவட்டத்திற்குட்பட்ட நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியப்பகுதிகளில் 4,18,352 ஆண்களும், 4,43,612 பெண்களும், இதர வாக்காளர்கள் 57 பேரும் என மொத்தம் 8,62,021 நபர்கள் வாக்காளர்களாக உள்ளனர்.
இந்த இறுதி வாக்காளர் பட்டியல், கரூர் மற்றும் குளித்தலை நகராட்சிகளில் அந்தந்த நகராட்சி அலுவலகங்களிலும், பேரூராட்சி அலுவலகங்களிலும், அந்தந்த கிராம ஊராட்சி அலுவலகங்களிலும் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்த வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்ட நபர்கள் சம்பந்தப்பட்ட சட்டமன்ற தொகுதி வாக்காளர் பதிவு அலுவலர்களை தொடர்பு கொண்டு, அவர்தம் பெயரை முதலில் சட்டமன்ற தொகுதி வாக்காளர் பட்டியலில் சேர்த்திடவேண்டும். அதன்பின்னரே உள்ளாட்சித்தேர்தல் வாக்காளர் பட்டியலில் அவர்தம் பெயர் இடம்பெற இயலும். உள்ளாட்சித்தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் செய்யக் குறிப்பிடப்படும் இறுதி நாள் வரை வாக்காளர்கள் தங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்கவோ, நீக்கவோ மாற்றம் செய்யவோ இயலும்.
இதற்கென்று நடத்தப்படும் சிறப்பு முகாம்களிலும் வாக்காளர்கள் தங்களது மனுக்களை அளிக்கலாம். சட்டமன்ற தொகுதிக்கான வாக்காளர் பதிவு அலுவலரால் சேர்த்தல், நீக்கல் அல்லது திருத்தம் செய்து தரப்படும் ஆணைகள் உள்ளாட்சி வாக்காளர் பட்டியலில் முறையாக பதியப்படும். உள்ளாட்சித்தேர்தலுக்காக கரூர் மாவட்டத்தில் உள்ள நகராட்சி பகுதிகளுக்குட்பட்ட வாக்குச்சாவடிகளுக்கு 1,912 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களும், 980 கட்டுப்பாட்டு கருவிகளும் பயன் படுத்தப்படவுள்ளன. ஊரகப்பகுதிகளுக்கு வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடத்தப்படும். இதற்காக 3,460 வாக்குப்பெட்டிகள் தயார் நிலையில் அந்தந்த ஊராட்சி ஒன்றியங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது என மாவட்ட கலெக்டர் தெரிவித்தார்.
இந்த கூட்டத்தில்,ஊராட்சிகளின் உதவி இயக்குனர் உமாசங்கர், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்(உள்ளாட்சி தேர்தல்) செல்வராஜ், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல், கரூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் மொத்தம் 48 வார்டுகள் உள்ளன. உள்ளாட்சி தேர்தலையொட்டி இதற்கான இறுதி வாக்காளர் பட்டியலை கரூர் நகராட்சி அலுவலகத்தில் வைத்து நகராட்சி ஆணையர் (பொறுப்பு) ராஜேந்திரன் வெளியிட்டார். கரூர் நகராட்சியில் மொத்தம் 85,935 ஆண் வாக்காளர்களும், 93,025 பெண் வாக்காளர்களும், 5 இத ர வாக்காளர்களும் என மொத்தம் 1,78,965 வாக்காளர்கள் உள்ளனர். வண்ண புகைப்படத்துடன் கூடிய வார்டு வாரியான வாக்காளர் பட்டியல் நகராட்சியில் உள்ள 192 வாக்குப்பதிவு மையங்களிலும், நகராட்சி அலுவலகத்திலும் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன. இந்த நிகழ்ச்சியில் கரூர் வருவாய் அலுவலர் பாஸ்கரன் உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இதேபோல குளித்தலை நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் மொத்தம் 24 வார்டுகள் உள்ளன. உள்ளாட்சி தேர்தலையொட்டி இதற்கான இறுதி வாக்காளர் பட்டிலை குளித்தலை நகராட்சி அலுவலகத்தில் இருந்து 24 வாக்குச்சாவடிகளுக்கும் அனுப்பட்டு உள்ளது. இதில் குளித்தலை நகராட்சியில் 10,482 ஆண் வாக்காளர்கள், 11, 482 பெண் வாக்காளர்களும், ஒரு இதர வாக்காளரும் என மொத்தம் 21,965 வாக்காளர்கள் உள்ளனர்.
Related Tags :
Next Story