வேலூர் தலைமை தபால் அலுவலகத்தில் ‘நமது புகைப்படத்துடன் கூடிய தபால்தலை’ பெற தனிப்பிரிவு
வேலூர் தலைமை தபால் அலுவலகத்தில் ‘நமது புகைப்படத்துடன் கூடிய தபால்தலை’ பெறுவதற்கு தனிப்பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.
வேலூர்,
பொதுமக்கள் தாங்கள் அனுப்பும் தபால்களில், தலைவர்களின் புகைப்படத்துடன்கூடிய தபால் தலைகளை ஒட்டி அனுப்பி வருகிறார்கள். ஆனால் தற்போது தபால் அனுப்புபவர்கள் தங்கள் புகைப்படத்துடன் கூடிய தபால் தலைகளை ஒட்டி அனுப்பும் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது.
இதுபோன்ற தபால் தலைகளை பெறுவதற்கு வேலூர் தலைமை தபால் அலுவலகத்தில் ‘நமது புகைப்படத்துடன் கூடிய தபால் தலைகள்’ என்ற தனிப்பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.
இதற்கான தனிப்பிரிவு தொடக்கவிழா நேற்று நடந்தது. வேலூர் கோட்ட கண்காணிப்பாளர் கோமல்குமார் தலைமை தாங்கினார். வி.ஐ.டி. செய்திதொடர்பு உதவி இயக்குனர் அருண்குமார், சி.எம்.சி. எபினேசர்சுந்தர்ராஜன், தபால்தலை சேகரிப்போர் சங்க தலைவர் தமிழ்வாணன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டனர்.
இந்த தனிப்பிரிவில் நமது புகைப்படத்துடன் கூடிய தபால் தலைகளை பெற்றுக்கொள்ளலாம். இதற்கு ரூ.300 கட்டவேண்டும். மேலும் நமது புகைப்படத்தை கொடுக்க வேண்டும். இல்லையென்றால் ஆதார் அட்டைக்கு எடுப்பதுபோன்று அங்கேயே புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம். அதன்பிறகு நமது புகைப்படத்துடன் கூடிய 5 ரூபாய் தபால்தலைகள் 12 பெற்றுக் கொள்ளலாம். இந்த 12 தபால் தலைகளை பிரிண்ட் எடுப்பதற்கு பயன்படுத்தப்படும் பேப்பருக்காக ரூ.300 வசூல் செய்யப்படுகிறது. மேலும் ரோஜா பூ வாசனை வரக்கூடிய பேப்பரில் வேண்டுமென்றால் ரூ.500 கட்டவேண்டும்.
புகைப்படம் எடுத்த சிறிது நேரத்திலேயே நமது புகைப்படத்துடன் கூடிய தபால் தலைகளை பெற்றுக் கொள்ளலாம். இந்த தபால்தலைகளை நாம் மற்றவர்களுக்கு அனுப்பும் தபால்களில் ஒட்டி அனுப்பலாம். இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளுக்கு அனுப்பும் தபால்களில்கூட ஒட்ட பயன்படுத்தலாம்.
நிகழ்ச்சியில் உதவிகோட்ட கண்காணிப்பாளர் ராஜகோபாலன், அஞ்சலக ஆய்வாளர் மோகன்தாஸ், மக்கள் தொடர்பு அலுவலர்கள் செல்வக்குமார், சிவலிங்கம் மற்றும் அலுவலக பணியாளர்கள் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story