திருவண்ணாமலையில் ரூ.30¼ கோடியில் ரெயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி - கலெக்டர் ஆய்வு


திருவண்ணாமலையில் ரூ.30¼ கோடியில் ரெயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி - கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 5 Oct 2019 4:15 AM IST (Updated: 5 Oct 2019 3:11 AM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலையில் ரூ.30¼ கோடியில் ரெயில்வே மேம்பாலம் அமைக்கும் பணியை கலெக்டர் கந்தசாமி ஆய்வு செய்தார்.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலையில் உள்ள திண்டிவனம் சாலையில் ரெயில் தண்டவாளத்தை மையமாக கொண்டு ரூ.30 கோடியே 38 லட்சம் மதிப்பில் ரெயில்வே மேம்பாலம் அமைக்கப்பட உள்ளது. இது தாலுகா அலுவலகத்தில் தொடங்கி நெடுஞ்சாலைத் துறை அலுவலகம் அருகில் நிறைவடைகிறது. இந்த மேம்பாலத்தின் இருபுறமும் 7 மீட்டர் அகலத்திற்கு சர்வீஸ் சாலை அமைக்கப்பட உள்ளது. மேம்பாலத்தின் இருபுறமும் நடைப்பாதையுடன் கூடிய வடிகால்வாய்கள் அமைக்கப்படுகிறது.

மேலும் அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வரும் பாதசாரிகள் ஓய்வு எடுப்பதற்கு மேம்பாலத்தின் கீழ் மேடை அமைக்கப்படுகிறது. இந்த மேம்பாலம் அமைக்கும் பணி மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனால் திண்டிவனம் சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. திண்டிவனம் சாலையில் நெடுஞ்சாலைத் துறை அலுவலகம் உள்ள பகுதியில் மேம்பாலத்திற்கு பில்லர்கள் அமைக்கப்பட்டு பின்னர் தாலுகா அலுவலகம் உள்ள பகுதியில் பில்லர்கள் அமைக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் நேற்று ரெயில்வே மேம்பாலம் அமைக்கும் பணியை மாவட்ட கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது நெடுஞ்சாலை மற்றும் ரெயில்வே துறை அதிகாரிகளிடம் மேம்பாலம் அமைக்கும் பணியின் நிலவரம் குறித்து கேட்டறிந்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

சுமார் ரூ.30¼ கோடி மதிப்பில் இந்த மேம்பால பணிகள் நடந்து வருகிறது. ரூ.2½ கோடி மதிப்பில் ரெயில்வே துறையின் சார்பில் இணைப்பு பாலம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டு உள்ளது. பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு வருகிற மார்ச் மாதம் இறுதிக்குள் மேம்பாலத்தின் மேல் பகுதி வழியாக வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படும். பின்னர் இணைப்பு சாலை பணிகள் முடிக்கப்பட்டு மே மாதம் இறுதிக்குள் அதன் வழியாக வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின்போது உதவி கலெக்டர் ஸ்ரீதேவி, வேலூர் கோட்ட நெடுஞ்சாலைத் துறை (திட்டங்கள்) உதவி இயக்குனர் பாபு, உதவி பொறியாளர் அருள், ரெயில்வே துறையின் முதன்மை பகுதி பொறியாளர்கள் தமிழழகன், மனோகர், தாசில்தார் அமுல் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Next Story