மானிய தொகையை மத்திய அரசு குறைத்து விட்டது - அமைச்சர் கந்தசாமி புகார்


மானிய தொகையை மத்திய அரசு குறைத்து விட்டது - அமைச்சர் கந்தசாமி புகார்
x
தினத்தந்தி 4 Oct 2019 11:45 PM GMT (Updated: 4 Oct 2019 11:33 PM GMT)

புதுவைக்கு வழங்கும் மானிய தொகையை மத்திய அரசு குறைத்து விட்டது என்று அமைச்சர் கந்தசாமி புகார் தெரிவித்தார்.

காரைக்கால்,

காரைக்கால் டணால் தங்கவேல் கலையரங்கில் மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்புற அமைச்சகம், புதுச்சேரி நகர மற்றும் கிராம அமைப்புத்துறை, குடிசை மாற்று வாரியம், ஆதிதிராவிடர் நலம் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் அங்கிகார் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

புதுச்சேரி சமூக நலத்துறை அமைச்சர் கந்தசாமி முகாமுக்கு தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் சந்திரபிரியங்கா, அசனா, கீதா ஆனந்தன், கலெக்டர் விக்ராந்த் ராஜா, துணை கலெக்டர் ஆதர்ஷ் மற்றும் பலர் கலந்துகொண்டனர். ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில், 250 பயனாளிகளுக்கு ரூ.ஒரு கோடியே 15 லட்சம் மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் கந்தசாமி வழங்கினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

சுற்றுச்சூழலுக்கு கேடு இல்லாத சமையல் கியாசை மக்கள் அனைவரும் பயன்படுத்தவேண்டும். வீடுகளில் சூரிய மின்சக்தியை பயன்படுத்த மத்திய அரசு 40 சதவீதமும், மாநில அரசு 20 சதவீதமும் மானியம் வழங்குகிறது. மீதியுள்ள 40 சதவீத தொகையை வங்கி மூலம் பெற்று அனைவரும் வீடுகளில் சூரிய மின்சக்தி திட்டத்தை பயன்படுத்தவேண்டும்.

ஒவ்வொரு அரசு அதிகாரிகளும் தங்கள் கடமையை சிறப்பாக செய்யவேண்டும். நாங்கள் அனுப்பும் கோப்புகளை திருப்பி அனுப்பாமல், குறித்த காலத்தில் மக்களை சென்றடைய செய்ய வேண்டும். மத்திய அரசு புதுவைக்கான மானியத்தை குறைத்து விட்டது. அதை வைத்து எங்களால் இயங்க முடியவில்லை. புதுச்சேரியில் சுமார் 10 ஆயிரம் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியவில்லை. எனவே கூடுதல் மானியம் கேட்டுள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில், புதுச்சேரி நகர் மற்றும் கிராம அமைப்புத்துறை தலைமை நிர்வாக அதிகாரி ராமச்சந்திரன், ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குனர் ரகுநாதன், உதவி இயக்குனர் ஆறுமுகம் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Next Story