புரட்டாசி 3-வது சனிக்கிழமையையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு திரளான பக்தர்கள் சாமி தரிசனம்


புரட்டாசி 3-வது சனிக்கிழமையையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
x
தினத்தந்தி 6 Oct 2019 4:00 AM IST (Updated: 6 Oct 2019 1:27 AM IST)
t-max-icont-min-icon

புரட்டாசி 3-வது சனிக்கிழமையையொட்டி பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர்.

பெரம்பலூர்,

புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு விரதம் இருந்தால் அல்லவை நீங்கி நல்லவை சேரும், வளமான வாழ்வு வசப்படும் என்பது பக்தர்களின் ஐதீகம். இதனால் புரட்டாசி மாதத்தில் வரும் அனைத்து சனிக்கிழமைகளிலும் பெருமாளுக்கு பக்தர்கள் விரதமிருந்து வழிபட்டு வருகிறார்கள். மேலும் புரட்டாசி மாத அனைத்து சனிக்கிழமைகளிலும் பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெறும். நேற்று புரட்டாசி மாத 3-வது சனிக்கிழமையையொட்டி பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோவில் உள்ளிட்ட கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதனால் பெருமாள் கோவில்களில் அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. பெரம்பலூரில் உள்ள மதனகோபாலசுவாமி கோவிலில் புரட்டாசி 3-வது சனிக்கிழமையையொட்டி பெருமாளுக்கு பால், பன்னீர், சந்தனம், விபூதி, தயிர் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பெருமாளுக்கு தீபாராதனை காட்டப்பட்டது. இதேபோல் இரவிலும் சிறப்பு அபிஷேகமும், அலங்காரமும் பெருமாளுக்கு நடைபெற்றது. இதனால் மதனகோபாலசுவாமி கோவிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று காத்திருந்து பெருமாளை பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

பாடாலூர் பூ மலை சஞ்சீவிராயர்

பெரம்பலூர் மதனகோபாலசுவாமி கோவில் முன்பு உள்ள கம்பத்து ஆஞ்சநேயர் கோவிலிலும், சிறுவாச்சூர் பெரியசாமி மலைக்கோவிலுக்கு செல்லும் வழியில் உள்ள கம்பபெருமாள் கோவிலிலும் புரட்டாசி 3-வது சனிக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. ஆலத்தூர் தாலுகா பாடாலூரில் மலையில் உள்ள பூ மலை சஞ்சீவிராயருக்கும், மலை அடிவாரத்தில் உள்ள வழித்துணை ஆஞ்சநேயருக்கும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

கல்லங்குறிச்சி

இதேபோல் அரியலூர் மாவட்டம், வி.கைகாட்டி அருகே உள்ள கல்லங்குறிச்சியில் உள்ள கலியுக வரதராஜ பெருமாள் கோவிலில் நேற்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி ஸ்ரீதேவி, பூதேவி, கலியுக வரதராஜ பெருமாளுக்கு பால், பன்னீர், சந்தனம் உள்பட பல்வேறு பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் பெருமாளுக்கு மலர்கள் மற்றும் வண்ண விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து அரியலூர் மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து வந்த பக்தர்கள் மாடு, ஆடு, தானியங்கள் நேர்த்திக்கடனாக செலுத்தி முடி காணிக்கை செய்து பின்னர் சாமி தரிசனம் செய்தனர். இதனை தொடர்ந்து கோவில் வளாகத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் உத்தரவின்பேரில், அரியலூர், கயர்லாபாத் போலீசார் மற்றும் ஊர்காவல் படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

Next Story