தஞ்சையில் 301 மதுபாட்டில்களுடன் 2 பேர் கைது ஸ்கூட்டர் பறிமுதல்; அ.தி.மு.க. பிரமுகர்- தம்பிக்கு வலைவீச்சு


தஞ்சையில் 301 மதுபாட்டில்களுடன் 2 பேர் கைது ஸ்கூட்டர் பறிமுதல்; அ.தி.மு.க. பிரமுகர்- தம்பிக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 6 Oct 2019 11:00 PM GMT (Updated: 6 Oct 2019 7:15 PM GMT)

தஞ்சையில் 301 மதுபாட்டில்களுடன் 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஸ்கூட்டர் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அ.தி.மு.க. பிரமுகர் மற்றும் அவருடைய தம்பியை வலைவீசி தேடி வருகிறார்கள்.

தஞ்சாவூர்,

தஞ்சையில் உள்ள டாஸ்மாக் கடை பார்களில் புதுச்சேரியில் இருந்து மதுபாட்டில்களை கடத்தி வந்து, அதில் இருந்து மதுபானத்தை தமிழக டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்படும் பாட்டில்களில் ஊற்றி விற்பனை செய்யப்படுவதாக தமிழ் மாநில வாணிபக்கழக மண்டல சிறப்பு கண்காணிப்பாளர் முருகன் மற்றும் லஞ்ச ஒழிப்பு கண்காணிப்பாளர் ஆகியோருக்கு புகார்கள் வந்தன. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க தஞ்சை மதுவிலக்கு பிரிவு போலீசாருக்கு உத்தரவிடப்பட்டது.

அதன் பேரில் இன்ஸ்பெக்டர் ஹேமாவதி, சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சேகர், ஏட்டுகள் புண்ணியராஜ், பாபு மற்றும் போலீசார் தஞ்சையில் உள்ள டாஸ்மாக் கடை பார்களில் சோதனை நடத்துவதற்காக சென்றனர். கரந்தையில் போக்குவரத்துக்கழக பணிமனை அருகே சென்ற போது சந்தேகத்தின் பேரில் நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.

301 பாட்டில்கள் பறிமுதல்

விசாரணையில் அவர்கள் டாஸ்மாக் கடை பார்களில் வேலை செய்து வருபவர்கள் என்பதும், அவர்கள் கரந்தை வடக்கு குருவிக்காரத்தெருவை சேர்ந்த நவநீதகிருஷ்ணன் (வயது43), மானம்புச்சாவடியை சேர்ந்த சந்தானம் (52) என்பது தெரிய வந்தது. மேலும் அவர்கள் வைத்திருந்த அட்டைப்பெட்டியில் மதுபாட்டில்கள் இருந்தது.

இந்த மதுபாட்டில்கள் புதுச்சேரியில் இருந்து கடத்தி வரப்பட்டு, அதில் இருந்த மதுவை, தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்படும் பாட்டில்களில் ஊற்றி, லேபிள் ஒட்டி பார்களில் விற்பனை செய்வதற்காக கொண்டு செல்லப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து அவர்களை கைது செய்து, அவர்களிடம் இருந்த 301 மதுபாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

2 பேருக்கு வலைவீச்சு

மேலும் அவர்கள் வந்த ஸ்கூட்டரும் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக தஞ்சை வடக்குவாசலை சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகரான பப்பு என்ற கிருஷ்ணமூர்த்தி மற்றும் அவருடைய தம்பி சின்ன பப்பு என்ற முத்துக்குமார் ஆகிய 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Next Story