கீழடி அகழாய்வுக்கு மத்திய அரசு கூடுதல் நிதி வழங்க வேண்டும் - த.மா.கா. வலியுறுத்தல்
கீழடி அகழாய்வுக்கு மத்திய அரசு கூடுதல் நிதி வழங்க வேண்டும் என்று த.மா.கா. வலியுறுத்தி உள்ளது.
திருப்புவனம்,
திருப்புவனம் அருகே கீழடியில் நடந்து வரும் அகழாய்வு பணிக்கு மத்திய அரசு, தமிழக அரசுக்கு கூடுதல் நிதி வழங்க வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் மாநில இளைஞர் அணி தலைவர் யுவராஜா கேட்டுக்கொண்டார். அவர் கீழடிக்கு வந்து அங்கு நடைபெற்று வரும் அகழாய்வு பணிகளையும், கண்டறியப்பட்ட பொருள்களையும் பார்வையிட்டார்.
பின்பு அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, கீழடி அகழாய்வு 2600 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தமிழர்களின் பெருமையை வெளிக்கொண்டு வந்துள்ளது. இந்த ஆய்வு பணியில் ஈடுபட்டுள்ள தொல்லியல்துறை அதிகாரிகளையும், இதற்கு நிதி வழங்கிய தமிழக அரசையும் த.மா.கா. சார்பில் பாராட்டுகிறோம்.
5-ம் கட்ட அகழாய்வை போல அடுத்த கட்ட ஆய்வுகள் பல கட்டங்களாக விரிவுபடுத்த வேண்டும். இதற்கு மத்திய அரசு, தமிழக அரசுக்கு கூடுதல் நிதி வழங்க வேண்டும். கீழடி அகழாய்வு மூலம் தமிழர்களுக்கு பெருமை கிடைத்துள்ளது. அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்ட பொருள்களை வைத்து கீழடியில் அருங்காட்சியகம் அமைக்க வேண்டும்.
வேறு எந்த ஊரிலும் அருங்காட்சியகம் அமைக்கக்கூடாது. கீழடி அகழாய்வை பார்வையிட சராசரியாக தினமும் 2 ஆயிரம் பேர் வருகின்றனர். இவர்களுக்கு நிழற்குடை மற்றும் குடிநீர் வசதி செய்துதர வேண்டும். மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் தண்ணீரின்றி கடந்த 7 ஆண்டுகளாக விவசாயம் பொய்த்து விட்டது.
இந்த ஆண்டு, 2 மாவட்டங்களின் விவசாய பணிக்கு வைகையில் தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிடவேண்டும் என்றார். அப்போது த.மா.கா சிவகங்கை மாவட்ட தலைவர் பாலசுப்ரமணியம், திருப்புவனம் வட்டார தலைவர்கள் வக்கீல் ராஜா, மணி, மடப்புரம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராஜா உள்பட கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story