அடிக்கடி மின்தடை ஏற்படுவதை கண்டித்து டிரான்ஸ்பார்மர்களுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி


அடிக்கடி மின்தடை ஏற்படுவதை கண்டித்து டிரான்ஸ்பார்மர்களுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி
x
தினத்தந்தி 9 Oct 2019 10:30 PM GMT (Updated: 9 Oct 2019 3:57 PM GMT)

மாளந்தூர் கிராமத்தில் அடிக்கடி மின் தடை ஏற்படுவதை கண்டித்து டிரான்ஸ்பார்மர்களுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தும் போராட்டத்தில் பொதுமக்கள் ஈடுபட்டனர்.

பெரியபாளையம்,

திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம் ஊத்துக்கோட்டை அருகே மாளந்தூர் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் சுமார் 10,000 பேர் வசித்து வருகின்றனர். இங்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் ரேஷன்கடைக்கு செல்லும் வழியில் 2 டிரான்ஸ்பார்மர்கள் உள்ளது. இந்த டிரான்ஸ்பார்மர்களை தாங்கி நிற்கும் 4 சிமெண்டு கம்பங்களும் சேதம் அடைந்து வலுவிழந்து காணப்படுகிறது.

அவற்றை மாற்றக்கோரியும், மாளந்தூர் கிராமத்தில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதை தடுக்கக்கோரியும், அறுந்து விழும் நிலையில் உள்ள மின்கம்பிகளை மாற்றக்கோரியும் பொதுமக்கள் ஊத்துக்கோட்டையில் உள்ள உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் பலமுறை மனு கொடுத்தும் எந்த பயனும் இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த இந்த கிராம மக்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் வட்ட குழு உறுப்பினர் குமார் தலைமையில் டிரான்ஸ்பார்மர்களுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் வட்டச் செயலாளர் கண்ணன், நிர்வாகிகள் பாலாஜி, கங்காதரன், ரமா, அருள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

கிராம எல்லையில் இருந்து மேளதாளம் முழங்க மலர் வளையத்தை ஊர்வலமாக டிரான்ஸ்பார்மர்கள் அருகே கொண்டு வந்தனர். பின்னர் கிராம மக்களின் குறையை தீர்க்காத மின்வாரிய அதிகாரிகளை கண்டித்து கோஷங்கள் எழுப்பியவாறு டிரான்ஸ்பார்மர்களுக்கு மலர் வளையம் வைத்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த ஊத்துக்கோட்டை மின்வாரிய உதவி பொறியாளர் குமரகுரு மற்றும் அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் ரேஷன் கடைக்கு செல்லும் வழியில் ஆபத்தை விளைவிக்கும் வகையில் உள்ள டிரான்ஸ்பார்மர்களை பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று கலெக்டரின் ஒப்புதலோடு

ஜோதி நகர் பகுதியில் மாற்றி தருவதாக உறுதி கூறினர்.

Next Story