குன்னூர் சிம்ஸ் பூங்காவில் குடிநீர் ஏ.டி.எம். எந்திரத்தில் பழுது - சுற்றுலா பயணிகள் அவதி


குன்னூர் சிம்ஸ் பூங்காவில் குடிநீர் ஏ.டி.எம். எந்திரத்தில் பழுது - சுற்றுலா பயணிகள் அவதி
x
தினத்தந்தி 9 Oct 2019 10:00 PM GMT (Updated: 9 Oct 2019 8:30 PM GMT)

குன்னூர் சிம்ஸ் பூங்காவில் உள்ள குடிநீர் ஏ.டி.எம். எந்திரத்தில் பழுதாகி உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் அவதியடைந்து உள்ளனர்.

குன்னூர்,

நீலகிரி மாவட்டத்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த முற்றிலும் தடை விதித்து கலெக்டர் உத்தரவிட்டார். குறிப்பாக பிளாஸ்டிக் பாட்டில்களில் குடிநீர், குளிர்பானங்களை அடைத்து விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஆனாலும் சுற்றுலா பயணிகளின் சிரமத்தை போக்கும் வகையில் ஆங்காங்கே குடிநீர் ஏ.டி.எம். எந்திரங்கள் அமைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதில் ரூ.5 நாணயத்தை போட்டால் குளிர்ந்த அல்லது சூடான குடிநீரை பெற்று பருகி கொள்ளலாம். அதன்படி குன்னூரில் பஸ் நிலையம், மார்க்கெட், சிம்ஸ் பூங்கா உள்ளிட்ட இடங்களில் குடிநீர் ஏ.டி.எம். எந்திரங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இதனை சுற்றுலா பயணிகள் பயன்படுத்தி வந்தனர்.

இந்த நிலையில் சிம்ஸ் பூங்காவில் அமைக்கப்பட்டு உள்ள குடிநீர் ஏ.டி.எம். எந்திரம் பழுதாகி உள்ளது. அதில் ரூ.5 நாணயத்தை போட்டாலும் குடிநீர் வருவது இல்லை. இதனால் பூங்காவுக்கு வரும் சுற்றுலா பயணிகள் அவதியடைந்து உள்ளனர். மேலும் பூங்காவில் உள்ள குழாய்களிலும் குடிநீர் வருவது இல்லை. இதனால் அவர்கள் குடிநீருக்காக அலைந்து திரிவதை காண முடிகிறது.

இதுகுறித்து சுற்றுலா பயணிகள் கூறியதாவது:-

சுற்றுச்சூழலை கருத்தில் கொண்டு பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை விதித்து உள்ளனர். மேலும் குடிநீர் பாட்டில்களையும் கொண்டு வர அனுமதிப்பது இல்லை. அதற்கு பதிலாக ஆங்காங்கே குடிநீர் ஏ.டி.எம். எந்திரங்கள் அமைக்கப்பட்டு உள்ளது. அதனை பயன்படுத்தி கொள்ளலாம் என்று தெரிவித்தனர்.

ஆனால் இங்குள்ள குடிநீர் ஏ.டி.எம். எந்திரம் பழுதாகி உள்ளது. தாகம் அதிகமாக இருக்கும் சமயத்தில் குடிநீர் கிடைக்காமல் அவதியுற்று வருகிறோம். பூங்காவில் உள்ள குழாய்களிலும் குடிநீர் வரவில்லை. குழந்தைகள் குடிநீர் கேட்டு, அழுகின்றனர். குடிநீருக்காக அலைந்து திரிய வேண்டிய நிலை உள்ளது. பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தாமல் இருக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். ஆனால் அதற்கு மாற்று ஏற்பாடுகளை செய்து தந்தாலும், அதை முறையாக பின்பற்ற அரசு தயாராக இருப்பதாக தெரியவில்லை. எனவே இங்குள்ள குடிநீர் ஏ.டி.எம். எந்திரத்தில் உள்ள பழுதை உடனடியாக நீக்கி, அனைவருக்கும் குடிநீர் கிடைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வழிவகை செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story