பாரூர் ஏரியில் இருந்து 33 ஏரிகளுக்கு கால்வாய் அமைக்கும் திட்டம் நிறைவேற்றப்படும் செல்லகுமார் எம்.பி. பேட்டி


பாரூர் ஏரியில் இருந்து 33 ஏரிகளுக்கு கால்வாய் அமைக்கும் திட்டம் நிறைவேற்றப்படும் செல்லகுமார் எம்.பி. பேட்டி
x
தினத்தந்தி 9 Oct 2019 11:00 PM GMT (Updated: 9 Oct 2019 9:08 PM GMT)

பாரூர் ஏரியில் இருந்து 33 ஏரிகளுக்கு கால்வாய் அமைக்கும் திட்டம் நிறைவேற்றப்படும் என்று செல்லகுமார் எம்.பி. கூறினார்.

காவேரிப்பட்டணம்,

கிருஷ்ணகிரி மாவட்ட காங்கிரஸ் சார்பில் நடைபயணம் நடைபெற்றது. போச்சம்பள்ளி பஸ் நிலையத்தில் தொடங்கிய நடைபயணத்தை, கிருஷ்ணகிரி நாடாளுமன்ற உறுப்பினர் செல்லகுமார் தொடங்கி வைத்தார். கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். வட்டார தலைவர் விவேகானந்தன், முன்னாள் மாவட்ட தலைவர்கள் காசிலிங்கம், கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட பொதுச்செயலாளர் மனோகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த நடைபயணம் போச்சம்பள்ளியில் தொடங்கி கரடியூர், வீரமலை கூட்ரோடு, செல்லம்பட்டி கூட்டு ரோடு, நாகரசம்பட்டி கூட்டு ரோடு, மருதேரி கூட்டு ரோடு, பேருஅள்ளி வழியாக காவாக்கரை முருகர் கோவிலை வந்தடைந்தது.

அங்கு செல்லகுமார் எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-

ரெயில்வே திட்டம்

இந்த மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான ரெயில்வே திட்டம் 5 ஆண்டிற்குள் நிச்சயம் நிறைவேற்றுவேன். பாரூர் ஏரியில் இருந்து 33 ஏரிகளுக்கு கால்வாய் அமைக்கும் திட்டம் நிறைவேற்றப்படும். இந்த நடைபயணத்தில் விவசாயிகளை சந்தித்து அவர்களிடம் விவசாயம் சார்ந்த திட்டங்கள் குறித்து கேட்டறிந்துள்ளேன். பொருளாதார வீழ்ச்சியால், ஓசூரில் உள்ள பெரிய நிறுவனங்கள் பணியாளர்களை குறைக்கும் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனால் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மத்திய அரசு விவசாயிகளின் கடன்களை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதனை தொடர்ந்து, 2 மணியளவில் மீண்டும் தொடங்கிய நடைபயணம், நெடுங்கல், பெண்ணேஸ்வரமடம், ஏழுமலையான் நகர் கூட்டு ரோடு, சவுளூர் கூட்டு ரோடு வழியாக மாலை 5 மணியளவில் காவேரிப்பட்டணம் பஸ் நிலையத்தில் உள்ள காந்தி, காமராஜர் சிலைகளுக்கு மாலை அணிவித்து செல்லகுமார் எம்.பி. மரியாதை செலுத்தி நடைபயணத்தை நிறைவு செய்தார்.

இந்த நடைபயணத்தில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் முத்துகுமார், அகில இந்திய ராஜீவ்காந்தி இயக்க மாவட்ட தலைவர் ராமச்சந்திரன், காவேரிப்பட்டணம் வட்டார தலைவர் ராமன் மாவட்ட செயலாளர் கோவிந்தன், தர்மபுரி மாவட்ட தலைவர் கோவி சிற்றரசு, முன்னாள் சேர்மேன் ஆறுமுகம், நிகழ்ச்சியில் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் வட்டார தலைவர்கள், நகர பொறுப்பாளர்கள் ஒன்றிய பொறுப்பாளர்கள் உள்ளிட்ட கட்சி தொண்டர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

Next Story