‘நீட்’ தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைதான தந்தை-மகனுக்கு 24-ந்தேதி வரை காவல் நீட்டிப்பு - 4 பேரின் ஜாமீன் மனுக்கள் விசாரணை தள்ளிவைப்பு


‘நீட்’ தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைதான தந்தை-மகனுக்கு 24-ந்தேதி வரை காவல் நீட்டிப்பு - 4 பேரின் ஜாமீன் மனுக்கள் விசாரணை தள்ளிவைப்பு
x
தினத்தந்தி 11 Oct 2019 4:30 AM IST (Updated: 11 Oct 2019 2:17 AM IST)
t-max-icont-min-icon

‘நீட்’ தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த வழக்கில் கைதான தந்தை-மகனுக்கு வருகிற 24-ந்தேதி வரை காவல் நீட்டிக்கப்பட்டு உள்ளது. மேலும் 4 பேரின் ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணை தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

தேனி,

சென்னை தண்டையார்பேட்டையை சேர்ந்தவர் வெங்கடேசன். இவர், சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி வந்தார். அவருடைய மகன் உதித்சூர்யா (வயது 20). இவர், ‘நீட்’ தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேனி அரசு மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்ந்தார்.

இதுகுறித்து தேனி சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து உதித்சூர்யா, அவருடைய தந்தை டாக்டர் வெங்கடேசன் ஆகிய 2 பேரையும் கடந்த மாதம் 26-ந்தேதி கைது செய்தனர். பின்னர் அவர்கள் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களை தொடர்ந்து சென்னை மாணவர் பிரவீண், அவருடைய தந்தை சரவணன், மாணவர் ராகுல், அவருடைய தந்தை டேவிஸ், வாணியம்பாடியை சேர்ந்த மாணவர் இர்பானின் தந்தை முகமது ‌‌ஷபி ஆகியோரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

சேலம் கோர்ட்டில் சரண் அடைந்த மாணவர் இர்பான் நேற்று முன்தினம் தேனி ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவருக்கு வருகிற 15-ந்தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டு உள்ளது.

டாக்டர் வெங்கடேசன், முகமது ‌‌ஷபி ஆகியோருக்கு ஜாமீன் கேட்டு தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் நேற்று முன்தினம் தேனி ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டது. இதேபோல், இந்த வழக்கில் கைதான பிரவீண், அவருடைய தந்தை சரவணன், ராகுல், அவருடைய தந்தை டேவிஸ் ஆகியோருக்கு ஜாமீன் கேட்டு தேனி கோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணை தேனி ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நேற்று நடந்தது. மாஜிஸ்திரேட்டு பன்னீர்செல்வம் விசாரணை நடத்தினார். இந்த ஜாமீன் மனுக்கள் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீஸ் தரப்பில் ஆட்சேபனை மனு எதுவும் தாக்கல் செய்யப்படவில்லை.

இதுகுறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் மாஜிஸ்திரேட்டு விளக்கம் கேட்டார். அப்போது போலீசார், ‘விசாரணை அதிகாரி சென்னைக்கு சென்று இருப்பதால் பதில் மனு தாக்கல் செய்ய முடியவில்லை. ஜாமீன் மனு மீதான பதில் மனு தாக்கல் செய்வதற்கு கால அவகாசம் வழங்க வேண்டும்’ என்று கோரிக்கை வைத்தனர்.

அப்போது மாணவர்கள் மற்றும் அவர்களின் தந்தை சார்பில் ஆஜரான வக்கீல் விஜயகுமார், ‘இன்று (நேற்று) மாலை 5 மணி வரை காத்திருக்கிறோம். அதற்குள் சி.பி.சி.ஐ.டி. தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும்’ என்று வாதிட்டார்.

இதையடுத்து, ‘இந்த ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணை நாளை (இன்று) மீண்டும் நடக்கும். அதற்குள் சி.பி.சி.ஐ.டி. தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்’ என்று மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். இந்த மனு மீதான விசாரணை இன்று (வெள்ளிக்கிழமை) காலையில் மீண்டும் நடக்கிறது.

இதேபோல், மாணவர் இர்பானுக்கு ஜாமீன் கேட்டு வக்கீல் ஆனந்தன் நேற்று தேனி ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு வருகிற 14-ந்தேதி விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட மாணவர் உதித்சூர்யா, அவருடைய தந்தை டாக்டர் வெங்கடேசன் ஆகியோர் நீதிமன்ற காவல் நீட்டிப்பு தொடர்பாக தேனி ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களுக்கு வருகிற 24-ந்தேதி வரை காவல் நீட்டிப்பு செய்து மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்.

இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் பலத்த பாதுகாப்புடன் அழைத்து சென்று மதுரை மத்திய சிறையில் அடைத்தனர். கோர்ட்டுக்கு அவர்கள் இருவரையும் போலீசார் முகத்தை துணியால் மூடியபடி அழைத்து வந்தனர். பின்னர் கோர்ட்டில் இருந்தும் முகத்தை மூடியபடி சிறைக்கு அழைத்துச் சென்றனர்.

Next Story