கோத்தகிரியில் விதிமுறைகளை மீறிய 7 கட்டிடங்களுக்கு ‘சீல்' - பேரூராட்சி அதிகாரிகள் நடவடிக்கை


கோத்தகிரியில் விதிமுறைகளை மீறிய 7 கட்டிடங்களுக்கு ‘சீல் - பேரூராட்சி அதிகாரிகள் நடவடிக்கை
x
தினத்தந்தி 10 Oct 2019 10:30 PM GMT (Updated: 10 Oct 2019 8:49 PM GMT)

கோத்தகிரியில் விதிமுறைகளை மீறிய 7 கட்டிடங்களுக்கு ‘சீல்' வைத்து பேரூராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

கோத்தகிரி,

கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான தனியார் தங்கும் விடுதிகள் இயங்கி வருகின்றன. அதில் அனுமதியின்றி இயங்கி வரும் விடுதிகளும் அடங்கும். மேலும் வீடு கட்ட அனுமதி பெற்றுவிட்டு, பலரும் கட்டிடம் கட்டி வணிக ரீதியில் பயன்படுத்தி வருகின்றனர். இது தொடர்பான புகார்கள் நீலகிரி மாவட்ட நிர்வாகத்துக்கு தெரிவிக்கப்பட்டன. இதன்பேரில் கோத்தகிரியில் விதிமுறைகளை மீறியும், அனுமதியின்றி இன்றியும் கட்டிய கட்டிடங்களுக்கு சீல் வைத்து நடவடிக்கை எடுக்க பேரூராட்சி நிர்வாகத்துக்கு கலெக்டர் இன்னசென்ட் திவ்யா உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து கோத்தகிரியில் பேரூராட்சி அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். அப்போது 7 கட்டிடங்கள் விதிமுறைகளை மீறியும், அனுமதியின்றி இன்றியும் கட்டப்பட்டு உள்ளது தெரியவந்தது. இதையடுத்து அந்த கட்டிடங்களுக்கு சீல் வைக்கும் பணி நேற்று நடைபெற்றது.

அதன்படி முதற்கட்டமாக கோத்தகிரி அருகே உள்ள தாந்தநாடு பகுதியில் இயங்கி வந்த 2 தங்கும் விடுதிகளுக்கு, பேரூராட்சி செயல் அலுவலர் மணிகண்டன் தலைமையிலான குழுவினர் சீல் வைத்து நடவடிக்கை எடுத்தனர். இதைத்தொடர்ந்து ஓரசோலை பகுதியில் மகேந்திரன் என்பவர் தனது வீட்டின் தரைத்தளத்தை வணீக ரீதியில் பயன்படுத்தியதால், அதற்கும் சீல் வைக்க அதிகாரிகள் சென்றனர். அப்போது அதிகாரிகளை தடுத்த அவர், ‘தற்போது அதை வீடாக பயன்படுத்தி வருவதால் சீல் வைக்க கூடாது, எனக்கு கால அவகாசம் அளிக்க வேண்டும், இல்லையென்றால் குடும்பத்துடன் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்துவேன்' என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவரிடம் ‘2 மணி நேரத்துக்குள் கட்டிடத்தில் உள்ள பொருட்களை அப்புறப்படுத்த வேண்டும், அதன்பின்னர் சீல் வைக்கப்படும், பேரூராட்சிகளின் உதவி இயக்குனரை நேரில் சந்தித்து உரிய விளக்கம் அளித்து தீர்வு கண்டு கொள்ளலாம்‘ என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து போலீஸ் பாதுகாப்புடன் அந்த கட்டிடத்துக்கு சீல் வைக்கப்பட்டது.

அதன்பின்னர் காம்பாய் கடை, கிளப்ரோடு, டானிங்டன் ஆகிய பகுதிகளில் 4 தங்கும் விடுதிகள் உள்பட நேற்று ஒரே நாளில் கோத்தகிரியில் 7 கட்டிடங்களுக்கு சீல் வைக்கப்பட்டது. இதுகுறித்து கோத்தகிரி பேரூராட்சி செயல் அலுவலர் மணிகண்டன் கூறியதாவது:-

கோத்தகிரி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் விதிமுறைகளை மீறியும், அனுமதி இன்றியும் கட்டிய கட்டிடங்கள் குறித்து ஆய்வு செய்து, அதன் அறிக்கையை கலெக்டரிடம் சமர்ப்பித்தோம். இதைத்தொடர்ந்து கலெக்டரின் உத்தரவின்படி சீல் வைக்கும் பணி தொடங்கி உள்ளது. சம்பந்தப்பட்ட கட்டிட உரிமையாளர்களுக்கு சீல் வைக்கும் நடவடிக்கைக்கு முன்னதாகவே நோட்டீஸ் வழங்கப்பட்டு உள்ளது. அதன்பிறகே கட்டிடங்களுக்கு சீல் வைக்கப்பட்டு உள்ளது. மேலும் மின்சார இணைப்பும் துண்டிக்கப்பட்டு இருக்கிறது. அடுத்த கட்டமாக 40-க்கும் மேற்பட்ட கட்டிடங்களின் உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு, சீல் வைக்கும் பணி தொடங்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story