22 வட்டார வளமையங்களில் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம் - கலெக்டர் சண்முகசுந்தரம் தகவல்


22 வட்டார வளமையங்களில் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம் - கலெக்டர் சண்முகசுந்தரம் தகவல்
x
தினத்தந்தி 12 Oct 2019 4:00 AM IST (Updated: 12 Oct 2019 1:48 AM IST)
t-max-icont-min-icon

வேலூர் மாவட்டத்தில் உள்ள 22 வட்டார வளமையங்களில் மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற உள்ளது என்று கலெக்டர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

வேலூர், 

வேலூர் மாவட்டம் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறை சார்பில் 2019-20-ம் ஆண்டில் மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கான உள்ளடக்கிய கல்வியில் சிறப்பு மருத்துவ முகாம் 22 வட்டார வள மையங்களில் நடைபெற உள்ளது.

காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அரக்கோணம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கந்திலி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகியவற்றில் வருகிற 16-ந் தேதியும், கணியம்பாடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, நெமிலி வட்டார வளமையம், ஜோலார்பேட்டை தெற்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆகியவற்றில் 17-ந் தேதியும், வேலூர் அரசு முஸ்லிம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, திருப்பத்தூர் மீனாட்சி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சோளிங்கர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகியவற்றில் 18-ந் தேதியும் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு மருத்துவ முகாம் நடக்கிறது.

அதேபோன்று தொரப்பாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, நாட்டறம்பள்ளி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, காவேரிப்பாக்கம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகியவற்றில் 19-ந் தேதியும், அணைக்கட்டு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, ஆலங்காயம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, வாலாஜா அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகியவற்றில் 21-ந் தேதியும், கே.வி.குப்பம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, திமிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, ஆம்பூர் இந்து பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகியவற்றில் 22-ந் தேதியும், ஆற்காடு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, குடியாத்தம் நகராட்சி மேல்நிலைப்பள்ளி ஆகியவற்றில் 23-ந் தேதியும், ராணிப்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளி, சின்னவரிகம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆகியவற்றில் 24-ந் தேதியும் சிறப்பு மருத்துவ முகாம் நடக்கிறது.

இதில், 6 முதல் 8 வயதுக்கு உட்பட்ட மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கு எலும்புமுறிவு அறுவை சிகிச்சை, கண், காது, மூக்கு, தொண்டை, மனநலம், குழந்தைகள் உள்ளிட்ட பிரிவுகளில் சிறப்பு வாய்ந்த மருத்துவக்குழுவினர் கலந்து கொண்டு மருத்துவ பரிசோதனை செய்ய உள்ளனர். பின்னர் மருத்துவக்குழுவினரின் பரிந்துரையின்படி அவர்களுக்கு உதவி உபகரணங்கள் மற்றும் தேசிய அடையாள அட்டை வழங்கப்பட உள்ளது. எனவே மாற்றுத்திறனுடைய குழந்தைகளின் பெற்றோர்கள் இந்த முகாமை பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

Next Story