புதுவை அருகே பயங்கரம்: பட்டாசு ஆலை வெடி விபத்தில் 3 பெண்கள் உடல் சிதறி பலி மேலும் - 2 பேர் உயிர் ஊசல்


புதுவை அருகே பயங்கரம்: பட்டாசு ஆலை வெடி விபத்தில் 3 பெண்கள் உடல் சிதறி பலி மேலும் - 2 பேர் உயிர் ஊசல்
x
தினத்தந்தி 12 Oct 2019 12:16 AM GMT (Updated: 12 Oct 2019 12:16 AM GMT)

புதுவை அருகே பட்டாசு ஆலையில் தீப்பிடித்து பட்டாசுகள் வெடித்ததில் 3 பெண்கள் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பலியானார்கள். 2 பேருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பாகூர்,

புதுவை அரியாங்குப்பம் மணவெளியை சேர்ந்தவர் வடிவேலு. ஏற்கனவே இறந்து விட்டார். இவருடைய மனைவி குணசுந்தரி (வயது 45). இவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை பாகூர் அருகே உள்ள கரையாம்புத்தூர் அய்யனார் கோவில் ஏரிக்கரை பகுதியில் உள்ளது. இங்கு சிமெண்டு சீட்டால் ஆன ஒரு அறையும், கூரைகளால் வேயப்பட்ட 2 அறைகளும் இருந்தன.

சிமெண்டு சீட்டால் ஆன அறையில் பட்டாசுக்கு தேவையான கரிமருந்து உள்ளிட்ட மூலப்பொருட்கள் வைக்கப்பட்டிருந்தன. கூரைகளால் ஆன ஒரு அறையில் தயாரான பட்டாசு ரகங்கள் இருப்பு வைக்கப்பட்டிருந்தன. மற்றொரு அறையில் பட்டாசு தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர்.

தீபாவளி பண்டிகையையொட்டி கடந்த சில நாட்களாக பட்டாசு தயாரிப்பில் ஆண், பெண் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டிருந்தனர். வழக்கம்போல் நேற்று 8 பெண்கள் அங்கு வேலை செய்து கொண்டிருந்தனர். மதியத்துக்கு மேல் 3 பேர் வேலையை முடித்துக் கொண்டு தங்களது வீடுகளுக்கு சென்று விட்டனர்.

தொடர்ந்து பட்டாசு ஆலை உரிமையாளர் குணசுந்தரி, கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த கன்னியப்பன் மனைவி வைத்தீஸ்வரி (27), கரையாம்புத்தூர் சின்னச்சாமி மனைவி கலாமணி (45), விழுப்புரம் சொர்ணாவூரை சேர்ந்த பிரபு மனைவி தீபா (35), கரையாம்புத்தூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த விக்ரமன் என்பவரது மனைவி ஞானம்மாள் என்ற வரலட்சுமி (44) ஆகிய 5 பேரும் பட்டாசு தயாரிக்கும் வேலையில் ஈடுபட்டிருந்தனர்.

பிற்பகல் 2½ மணி அளவில் எதிர்பாராதவிதமாக பயங்கர சத்தத்துடன் பட்டாசுகள் திடீரென வெடித்து சிதறின. இதில் அங்கு இருப்பு வைக்கப்பட்டிருந்த பட்டாசு தயாரிக்க தேவையான கரி மருந்துகள், தயாரித்து வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் என அனைத்தும் ஒரே நேரத்தில் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறின.

இதில் அங்கு வேலை பார்த்துக் கொண்டிருந்த பெண் தொழிலாளர்கள் சிக்கினர். கூரையால் வேயப்பட்டிருந்ததால் தாக்குப்பிடிக்க முடியாமல் அந்த ஆலை இருந்த இடமே தெரியாத அளவுக்கு தரைமட்டமானது. பட்டாசுகள் வெடித்து சிதறியதால் அந்த பகுதியே புகை மண்டலமானது.

பட்டாசுகள் வெடித்த சத்தம் சுமார் 2 கி.மீ. தூரத்துக்கு கேட்டது. இந்த பயங்கர சத்தம் கேட்டு அந்த கிராமத்தை சேர்ந்தவர்கள் அங்கு ஓடி வந்து பார்த்தனர். அப்போது பட்டாசுகள் வெடித்ததில் வேலை பார்த்துக் கொண்டிருந்த பெண்கள் சிக்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடிக் கொண்டிருந்தவர்களை அங்கிருந்து மீட்டு அய்யனார் கோவில் ஏரிக்கரைக்கு கொண்டு வந்தனர்.

இதுபற்றி தகவல் தெரிவித்து கரையாம்புத்தூர், நெட்டப்பாக்கம் ஆகிய ஊர்களில் இருந்து 108 ஆம்புலன்ஸ் வேன்களை வரவழைத்து அதில் ஏற்றி அவர்களை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் பாகூர், வில்லியனூர், மடுகரை ஆகிய தீயணைப்பு நிலையங்களில் இருந்து தீயணைப்பு வீரர்கள் கரையாம்புத்தூருக்கு விரைந்து சென்றனர். பட்டாசு ஆலையில் பிடித்த தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைத்தனர்.

இதன்பின் அங்கு பார்த்தபோது சம்பவ இடத்திலேயே தீபா, வரலட்சுமி ஆகியோர் உடல் சிதறி பிணமானது தெரியவந்தது. உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டவர்கள் வைத்தீஸ்வரி, கலாமணி, குணசுந்தரி என்பது தெரியவந்தது. இவர்களில் வைத்தீஸ்வரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்து போனார். இதனால் சாவு எண்ணிக்கை 3 ஆனது.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து போலீஸ் சூப்பிரண்டு (தெற்கு) பாலகிருஷ்ணன், சிறப்பு பிரிவு போலீஸ் சூப்பிரண்டு மோகன்குமார், பாகூர் தாசில்தார் குமரன், பாகூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவுதம் சிவகணேஷ், சப்-இன்ஸ்பெக்டர்கள் விஜயகுமார், சந்திரசேகர் ஆகியோர் அங்கு வந்து பார்வையிட்டனர். தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பட்டாசு ஆலையில் தீப்பிடித்ததற்கான காரணம் குறித்து விசாரித்து வருகிறார்கள்.

கரையாம்புத்தூரில் பட்டாசுகள் வெடித்ததில் 3 பெண்கள் உடல் சிதறி பலியான சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

பட்டாசுகள் வெடித்ததில் அங்கு வேலை பார்த்துக் கொண்டிருந்த பெண்கள் சுமார் 100 அடி தூரத்துக்கு தூக்கி வீசப்பட்டனர். இதில் சம்பவ இடத்திலேயே பலியான பெண்களின் உடல் பாகங்கள் ஆங்காங்கே சிதறிக் கிடந்தன. அந்த பகுதியில் சுமார் 200 மீட்டர் தூரம் வரை இருந்த வேப்பமரம், கருவேல மரம், பனை மரம் உள்ளிட்ட மரங்கள் பலத்த சேதத்துக்குள்ளாயின. பட்டாசு ஆலை அருகில் இருந்த வயலும் கட்டிடத்தின் கற்கள் சிதறி விழுந்து பாதிப்புக்குள்ளானது.

பட்டாசுகள் வெடித்து சிதறியதில் அந்த வழியாக மேலே சென்ற மின் கம்பிகளும் சேதமடைந்தன. இதனால் அந்த பகுதியில் உள்ள 10-க்கும் மேற்பட்டவர்களின் வீடுகளில் இருந்த பிரிட்ஜ், மின் விசிறி, மிக்சி, டி.வி. உள்ளிட்ட மின் சாதனங்கள் சேதமடைந்தன. இதுபற்றி தகவல் அறிந்து மின் துறை ஊழியர்கள் சேதமடைந்த மின் கம்பிகளை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

பட்டாசு ஆலை நடத்தி வந்த குணசுந்தரியும் விபத்தில் சிக்கினார். பட்டாசுகள் வெடித்ததில் தூக்கி வீசப்பட்ட அவர் உடலில் தீப்பிடித்த நிலையில் சிறிது தூரம் நடந்து வந்துள்ளார். அதன்பின் கீழே விழுந்து விட்டார். இதைப் பார்த்ததும் ஏற்கனவே வெடிச்சத்தம் கேட்டு அங்கு வந்திருந்த இளைஞர்கள் அவரை காப்பாற்றுவதற்காக சென்றனர். அப்போது குணசுந்தரி தனது உடலில் ஆடை எதுவும் இல்லாததை உணர்த்தி அவர்களை நெருங்க விடாமல் தடுத்து ஒரு துணியை எடுத்து வந்து என்மீது போட்டு தூக்கிச் செல்லுங்கள் என்று கூறியுள்ளார். அதுமட்டுமல்லாமல் பட்டாசு ஆலை அறையில் விழுந்து கிடக்கும் மற்றவர்களை முதலில் காப்பாற்றுங்கள் என்று தெரிவித்துள்ளார். உயிருக்கு போராடிய நிலையிலும் மற்றவர்களை காப்பாற்றுமாறு குணசுந்தரி தெரிவித்த சம்பவம் அங்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Next Story