ஊத்துக்கோட்டையில் திருட்டு வழக்கில் ஒருவர் கைது 25 பவுன் நகை, ரூ.3½ லட்சம் பறிமுதல்


ஊத்துக்கோட்டையில் திருட்டு வழக்கில் ஒருவர் கைது 25 பவுன் நகை, ரூ.3½ லட்சம் பறிமுதல்
x
தினத்தந்தி 13 Oct 2019 3:45 AM IST (Updated: 13 Oct 2019 12:36 AM IST)
t-max-icont-min-icon

ஊத்துக்கோட்டையில் திருட்டு வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 25 பவுன் நகை, ரூ.3 லட்சத்து 45 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

ஊத்துக்கோட்டை,

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே உள்ள தாராட்சி கிராமத்தை சேர்ந்தவர் அஜீம்பாய். தொழில் அதிபர். 3 மாதங்களுக்கு முன் இவரது மோட்டார் சைக்கிள்பெட்டியை உடைத்து 60 பவுன் நகையை மர்ம நபர்கள் திருடிச் சென்று விட்டனர்.

இது குறித்து அஜீம்பாய் ஊத்துக்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக் குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில் திருவள்ளூர், வெள்ளவேடு, பொன்னேரி பகுதிகளில் புதிய யுக்தியை கொண்டு பணம் திருடும் சம்பவங்கள் நடைபெற்றன.

பணம் பறிக்கும் கும்பலை பிடிக்க திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்தன், ஊத்துக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரதாசன் தலைமையில் இன்ஸ்பெக்டர் ரமேஷ், ஏட்டுகள் ராவ்பகதூர், செல்வம், லோகு ஆகியோருடன் கூடிய சிறப்பு படை அமைத்தார். இந்த சிறப்புப் படை போலீசார் விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில் ஊத்துக்கோட்டை பஸ் நிலைய பகுதியில் நேற்று முன்தினம் இன்ஸ்பெக்டர் ரமேஷ், ஏட்டுகள் ராவ்பகதூர், செல்வம், லோகு ஆகியோர் ரோந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது ஒரு நபர் சந்தேகப்படும்படி நடமாடி கொண்டிருந்தார். அவரை பிடித்து விசாரணை செய்ததில் முன்னுக்கு பின் முரணாக கூறினார்.

தீவிர விசாரணையில் அந்த நபர் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் நகரி அருகே உள்ள ஒஜிகுப்பம் கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணன் (வயது 45) என்பவது தெரியவந்தது. இவர் தாராட்சி கிராமத்தை சேர்ந்த அஜீம்பாய் என்பவரது மோட்டார் சைக்கிளின் பெட்டியை உடைத்து நகைகள் திருடியதும் தெரிய வந்தது. மேலும் திருவள்ளூர், வெள்ளவேடு, பொன்னேரி பகுதிகளில் ரூ.5 லட்சம் வரை கொள்ளையடித்தது தெரிந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து போலீசார் ரூ.3 லட்சத்து 45 ஆயிரம் மற்றும் 25 பவுன் தங்க நகைகளை பறிமுதல் செய்தனர்.

பின்னர் போலீசார் அவரை ஊத்துக்கோட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Next Story