ஆபாச வீடியோ எடுத்து பெண் பலாத்காரம்: சேலம் ஆட்டோ டிரைவரை காவலில் எடுத்து போலீசார் விசாரணை


ஆபாச வீடியோ எடுத்து பெண் பலாத்காரம்: சேலம் ஆட்டோ டிரைவரை காவலில் எடுத்து போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 13 Oct 2019 4:30 AM IST (Updated: 13 Oct 2019 1:49 AM IST)
t-max-icont-min-icon

ஆபாச வீடியோ எடுத்து பெண்ணை மிரட்டி பலாத்காரம் செய்த புகாரில் சேலம் ஆட்டோ டிரைவரை காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம், 

சேலம் மாவட்டம் காகாபாளையம் அடுத்த செல்லியம்பாளையம் மதுரைவீரன் கோவில் தெருவை சேர்ந்தவர் மோகன்ராஜ் (வயது 42). ஆட்டோ டிரைவரான இவர், காகாபாளையம் பஸ் நிலையம் அருகே நின்று கொண்டிருந்த ஒருவரை ஓரின சேர்க்கைக்கு அழைத்ததாக மகுடஞ்சாவடி போலீசாரால் கைது செய்யப்பட்டு, சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். மேலும், அவர் ஒரு பெண்ணை மிரட்டி கட்டாயப்படுத்தி பலாத்காரம் செய்யும் வீடியோ வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதவிர, 7 பெண்களை மிரட்டி ஆட்டோ டிரைவர் மோகன்ராஜ் பலாத்காரம் செய்யப்பட்டதாகவும் புகார் எழுந்தது.

இதனிடையே, ஆட்டோ டிரைவர் மோகன்ராஜ் தன்னை மிரட்டி பலாத்காரம் செய்ததாகவும், மேலும், தன்னை ஆபாச வீடியோ எடுத்து வைத்திருப்பதாகவும் பெண் ஒருவர், கொண்டலாம்பட்டி போலீசில் புகார் செய்தார். இதையடுத்து அவர் மீது பலாத்காரம், கொலை மிரட்டல், அடைத்து வைத்து தாக்குதல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதனால் சிறையில் இருந்த அவரை போலீசார் மீண்டும் கைது செய்தனர்.

இந்த நிலையில், மோகன்ராஜை காவலில் எடுத்து விசாரித்தால் மேலும் பல தகவல்கள் கிடைக்கும் என்பதால் அவரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்தனர். இதற்காக கொண்டலாம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் பு‌‌ஷ்பராணி, சேலம் மகளிர் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதி, ஆட்டோ டிரைவர் மோகன்ராஜை 7 நாட்கள் காவலில் வைத்து விசாரணை நடத்த அனுமதி அளித்தார்.

இதையடுத்து சிறையில் இருந்து அவரை போலீசார் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று மருத்துவ பரிசோதனை செய்தனர். பின்னர் கொண்டலாம்பட்டி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அவர் கூறிய தகவல்களை போலீசார் வாக்குமூலமாக பதிவு செய்து கொண்டனர்.

அதாவது, எத்தனை பெண்களை இதுபோன்று வீடியோ எடுத்து மிரட்டி பலாத்காரம் செய்துள்ளார்? அதனை வீடியோவாக பதிவு செய்த செல்போன் எங்கு உள்ளது? அவருக்கு உடந்தையாக நண்பர்கள் யாரேனும் இருந்தார்களா? அவர்கள் எங்கு இருக்கிறார்கள்? உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை கேட்டு மோகன்ராஜிடம் போலீசார் விசாரணை நடத்தினர். ஆனால் சில கேள்விகளுக்கு மட்டுமே அவர் பதில் அளித்துள்ளதாகவும், பல கேள்விகளுக்கு பதில் கூறாமல் மவுனம் காத்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இருப்பினும், ஆட்டோ டிரைவர் மோகன்ராஜிடம் நடத்தப்படும் விசாரணையின் முடிவில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என்று போலீசார் தெரிவிக்கிறார்கள். இதனால் இந்த வழக்கில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Next Story