கூட்டுறவு வங்கி மூலம் உரம், பூச்சிக்கொல்லி மருந்துகளை தாமதமின்றி வழங்க வேண்டும் விவசாயிகள் வலியுறுத்தல்


கூட்டுறவு வங்கி மூலம் உரம், பூச்சிக்கொல்லி மருந்துகளை தாமதமின்றி வழங்க வேண்டும் விவசாயிகள் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 13 Oct 2019 10:45 PM GMT (Updated: 13 Oct 2019 8:08 PM GMT)

கூட்டுறவு வங்கி மூலம் உரம், பூச்சிக்கொல்லி மருந்துகளை தாமதமின்றி வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

நாகப்பட்டினம்,

நாகை மாவட்டத்தில் குறுவை, சம்பா, தாளடி என முப்போகம் நெல் சாகுபடி நடைபெறும். இதுதவிர கோடை நெல் சாகுபடியும் நடைபெறுவது வழக்கம். ஆனால் பருவமழை பொய்த்ததாலும், மேட்டூர் அணையில் இருந்து குறித்த நேரத்தில் தண்ணீர் திறந்து விடப்படாததாலும் முப்போகம் சாகுபடி நடைபெறவில்லை.

இந்த நிலையில் கடந்த ஆகஸ்டு மாதம் 13-ந்தேதி மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் கடைமடை பகுதியான நாகைக்கு வந்தது. இதையொட்டி நாகை விவசாயிகள் நேரடி விதைப்பு மற்றும் நாற்றங்கால் மூலம் சம்பா சாகுபடி பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் நாகை அருகே பாலையூரில் நாற்றங்கால் மூலம் சாகுபடி செய்யப்பட்ட வயல்களில் நாற்றுகளை பறித்து நடவு பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

நாகை மாவட்டத்தில் 1 லட்சத்து 25 ஆயிரத்து 800 எக்டேர் பரப்பளவில் சம்பா, தாளடி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ள விவசாயிகள் 60 ஆயிரம் எக்டேர் பரப்பளவில் நேரடி விதைப்பும், 28 ஆயிரத்து 800 எக்டேர் பரப்பளவில் நாற்றங்கால் முறையில் சம்பா சாகுபடியும் செய்துள்ளனர்.

உரம், பூச்சிக்கொல்லி மருந்து

இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூறியதாவது:-

நாகையில் நேரடி மற்றும் நாற்றங்கால் மூலம் சம்பா சாகுபடி பணிகளை மேற்கொண்டு வருகிறோம். தற்போது மேட்டூர் அணையில் 22 ஆயிரத்து 700 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இந்த கனஅடி தண்ணீரை வடகிழக்கு பருவமழை தொடங்கும் வரை தொடர்ந்து திறந்து விட வேண்டும். மேலும் பருவமழை தொடங்கும் முன்பு வெட்டாறு, கடுவையாறு, அடப்பாறு, அரிச்சந்திராநதி, கொள்ளிடம் உள்ளிட்ட 26 ஆறுகளின் கரைகளை பலப்படுத்த வேண்டும்.

விவசாய நிலங்களில் தண்ணீர் தேங்காமல் இருக்க முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தேவையான மணல் மூட்டைகளை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். கூட்டுறவு வங்கிகள் மூலம் டி.ஏ.பி., யூரியா, பொட்டா‌‌ஷ் உள்ளிட்ட உரம், பூச்சிக்கொல்லி மருந்துகளை தாமதமின்றி விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். சாகுபடி செய்யப்பட்டுள்ள வயல்களில் பூச்சி தாக்குதல் ஏற்பட்டால் வேளாண் தொழில்நுட்ப அதிகாரிகள் நேரில் கள ஆய்வு செய்து தீர்வு காண வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story