பாகூர் அருகே வெடி விபத்தில் காயமடைந்து சிகிச்சையில் இருந்த மற்றொரு பெண்ணும் சாவு; சிக்கிய 5 பேரும் பலியான பரிதாபம்


பாகூர் அருகே வெடி விபத்தில் காயமடைந்து சிகிச்சையில் இருந்த மற்றொரு பெண்ணும் சாவு; சிக்கிய 5 பேரும் பலியான பரிதாபம்
x
தினத்தந்தி 13 Oct 2019 10:45 PM GMT (Updated: 13 Oct 2019 8:25 PM GMT)

பாகூர் அருகே நடந்த வெடி விபத்தில் படுகாயமடைந்த மற்றொரு பெண்ணும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த விபத்தில் சிக்கிய 5 பேரும் பரிதாபமாக இறந்து போனார்கள்.

பாகூர்,

புதுவை அரியாங்குப்பம் மணவெளியை சேர்ந்தவர் வடிவேலு. இவரது மனைவி குணசுந்தரி (வயது 45). இவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை பாகூர் அருகே உள்ள கரையாம்புத்தூர் அய்யனார் கோவில் ஏரிக்கரையில் இருந்து வந்தது. கடந்த 11-ந்தேதி மதியம் தீபாவளி பண்டிகைக்காக மும்முரமாக பட்டாசு தயாரிக்கும் பணியில் பெண் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது திடீரென்று பட்டாசுகள் வெடித்ததில் அங்கு வேலை பார்த்துக் கொண்டிருந்த விழுப்புரம் சொர்ணாவூரைச் சேர்ந்த தீபா, கரையாம்புத்தூர் வரலட்சுமி ஆகியோர் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பலியானார்கள். பட்டாசு ஆலை உரிமையாளர் குணசுந்தரி, கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த வைத்தீஸ்வரி (27) (தீபாவின் தங்கை), கரையாம்புத்தூர் கலாமணி (45) ஆகியோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி அதே நாளில் வைத்தீஸ்வரி உயிரிழந்தார். நேற்று முன் தினம் பட்டாசு ஆலையின் உரிமையாளர் குணசுந்தரி இறந்து போனார். ஆபத்தான நிலையில் மற்றொரு பெண் கலாமணிக்கு அரசு ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவரும் நேற்று பரிதாபமாக இறந்தார்.

பட்டாசு ஆலை வெடி விபத்தில் சிக்கிய 5 பெண்களுமே பலியாகி விட்டனர். இதனால் வெடி விபத்து சம்பவம் நடந்து 3 நாட்களாகியும் கரையாம்புத்தூர் இன்னும் சோகத்தில் மூழ்கி கிடக்கிறது.

Next Story