ஆட்சியை குறைசொல்ல ரங்கசாமிக்கு தகுதியில்லை - நாராயணசாமி ஆவேசம்


ஆட்சியை குறைசொல்ல ரங்கசாமிக்கு தகுதியில்லை - நாராயணசாமி ஆவேசம்
x
தினத்தந்தி 14 Oct 2019 11:15 PM GMT (Updated: 14 Oct 2019 8:55 PM GMT)

எங்கள் ஆட்சியைப்பற்றி குறை சொல்ல ரங்கசாமிக்கு தகுதியில்லை என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

புதுச்சேரி,

புதுவை காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமாரை ஆதரித்து முதல்-அமைச்சர் நாராயணசாமி நேற்று சாமிப்பிள்ளைதோட்டம் பகுதியில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார். அவருடன் வைத்திலிங்கம் எம்.பி., முன்னாள் எம்.எல்.ஏ. நாரா.கலைநாதன், காங்கிரஸ் பிரமுகர் ஏழுமலை என்ற காசிலிங்கம் ஆகியோரும் உடன் சென்றனர்.

வாக்குசேகரிப்பின்போது முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமாருக்கு ஆதரவாக கூட்டணி கட்சிகளுடன் இணைந்து பல பிரிவுகளாக வாக்குசேகரித்து வருகிறோம். சாரம் பகுதியில் குடிநீர், பட்டா வழங்கும் பிரச்சினை உள்ளது என்று மக்கள் தெரிவித்தனர். மகளிர் இலவச அரிசி திட்டம் தொடரவேண்டும், வங்கியில் அரிசிக்கு பதிலாக பணத்தை செலுத்த வேண்டாம் என்றும் கூறினார்கள்.

இலவச அரிசி வழங்க நாங்கள் அமைச்சரவையில் முடிவு செய்து கவர்னருக்கு கோப்பு அனுப்பினோம். ஆனால் அவர் அதை மத்திய அரசுக்கு அனுப்பினார். மக்கள் விரும்பும் திட்டங்களை நிறைவேற்ற கவர்னர் கிரண்பெடியின் நடவடிக்கைகள் முட்டுக் கட்டையாக உள்ளன. புதுவை அரசுக்கு மத்திய அரசின் நிதி சரிவர கிடைக்கவில்லை என்பது மக்களுக்கு நன்றாக தெரிகிறது.

எங்கள் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டதாக எதிர்க்கட்சி தலைவர் ரங்கசாமி கூறியுள்ளார். அவரது ஆட்சியில் மக்கள் நிம்மதியாக வாழ்ந்தது போலவும், பட்டப்பகலில் கொலை, கொள்ளை நடக்காதது போலவும் பேசி வருகிறார். அவரது ஆட்சிக்காலத்தில்தான் ஊசுட்டேரியில் மாணவர் ஒருவரை வெட்டிக்கொலை செய்து சாக்குமூட்டையில் கட்டி வீசினார்கள். அவரது வீட்டின் அருகிலேயே கொலை நடந்தது.

இப்போதுகூட அவருடன் ரவுடிகள்தான் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். எங்கள் ஆட்சியைப்பற்றியோ சட்டம் ஒழுங்கினை பற்றியோ கருத்து சொல்வதற்கு ரங்கசாமிக்கு தகுதி கிடையாது. பிரசாரத்தின்போது மக்கள் கூறும் குறைகளை களைவதாக கூறியுள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதேபோல் புதுவை மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவரும், அமைச்சருமான நமச்சிவாயம் தலைமையில் காமராஜ் நகர் தொகுதிக்குட்பட்ட சங்கரதாஸ் சுவாமிகள் நகர், செந்தாமரை நகர் ஆகிய பகுதிகளில் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் வீடு, வீடாக சென்று வேட்பாளர் ஜான்குமாருக்கு ஆதரவு திரட்டினார்கள்.

இதில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன், துணைத்தலைவர் தேவதாஸ், பொதுச்செயலாளர்கள் சாமிநாதன், சிவசாமி, தனுசு, செயலாளர் வின்சென்ட்ராஜ், தி.மு.க. எம்.எல்.ஏ. கீதா ஆனந்தன், காரைக்கால் தி.மு.க. அமைப்பாளர் நாஜிம், ராஷ்டிரீய ஜனதா தலைவர் சஞ்சீவி உள்பட பல்வேறு அணி தலைவர்கள், நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

Next Story