ஜோலார்பேட்டையில் இருந்து இயக்கப்படும் ஏலகிரி எக்ஸ்பிரஸ் ரெயிலை மீண்டும் திருப்பத்தூரில் இருந்து இயக்க வேண்டும் - பொதுமக்கள் வலியுறுத்தல்


ஜோலார்பேட்டையில் இருந்து இயக்கப்படும் ஏலகிரி எக்ஸ்பிரஸ் ரெயிலை மீண்டும் திருப்பத்தூரில் இருந்து இயக்க வேண்டும் - பொதுமக்கள் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 14 Oct 2019 10:15 PM GMT (Updated: 14 Oct 2019 9:11 PM GMT)

திருப்பத்தூரை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஜோலார்பேட்டையில் இருந்து இயக்கப்படும் ஏலகிரி எக்ஸ்பிரஸ் ரெயிலை மீண்டும் திருப்பத்தூரில் இருந்து இயக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

திருப்பத்தூர், 

திருப்பத்தூர் சுற்றுப்பகுதிகளில் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கிருந்து சென்னைக்கு பஸ்சில் செல்ல 5 மணி நேரத்திற்கும் மேலாகிறது. மேலும் பயண கட்டணமும் அதிகம். திருப்பத்தூர் சுற்றுப்புற மக்களின் வசதிக்காக முன்பு ஜோலார்பேட்டையில் இருந்து சென்னை வரையில் இயக்கப்பட்டு வந்த ஏலகிரி எக்ஸ்பிரஸ் ரெயில் திருப்பத்தூர் வரை கடந்த 31.7.2005 முதல் நீட்டிப்பு செய்யப்பட்டது.

இதன் மூலம் அதிகாலை 4.35 மணிக்கு கிளம்பும் ஏலகிரி எக்ஸ்பிரஸ் காலை 9 மணியளவில் சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தை சென்றடையும். இந்த ரெயிலில் திருப்பத்தூரில் இருந்து சென்னைக்கு செல்ல ரூ.80 மட்டுமே கட்டணமாகிறது.

தினந்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் திருப்பத்தூரில் இருந்து சென்னை செல்ல இந்த ரெயிலையே பயன்படுத்தி வந்தனர். பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்த இந்த ரெயில் சேவை கடந்த 1.7.2013 முதல் ஜோலார்பேட்டையுடன் நிறுத்தப்பட்டது.

தற்போது ஜோலார்பேட்டையில் இருந்து அதிகாலை 4.55 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையம் வரை இயக்கப்படுகிறது. ஜோலார்பேட்டையில் இருந்து 9 கி.மீ. தொலைவில் உள்ள திருப்பத்தூரில் இருந்து அதிகாலையில் இந்த ரெயிலை பிடிக்க வேண்டுமானால், ஆட்டோ, ஷேர் ஆட்டோ அல்லது டவுன் பஸ்சை பிடித்து ஜோலார்பேட்டைக்கு வந்துதான் ரெயிலை பிடிக்க வேண்டும்.

அதுவும், ஜோலார்பேட்டையில் உள்ள ரெயில்வே மேம்பாலத்தில் ஏறிச் சென்று பயணச்சீட்டை பெற்று, பின்னர் கீழிறங்கி ரெயிலைப் பிடிக்க வேண்டும். இதனால் முதியவர்கள், பெண்கள், நோயாளிகள், குழந்தைகள் கடும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். மீண்டும் சென்னையில் மாலை 5.55 மணிக்கு புறப்பட்டு ஜோலார்பேட்டைக்கு இரவு 10.30 மணிக்கு வரும் ஏலகிரி எக்ஸ்பிரஸ் ரெயிலை திருப்பத்தூர் வரை நீடிக்க வேண்டும் இரவு நேரத்தில் ஜோலார்பேட்டை வந்து இறங்கி மீண்டும் திருப்பத்தூருக்கு வருவதற்கு பயணிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள்.

எனவே தற்போது திருப்பத்தூரை தலைமையிடமாகக் கொண்டு மாவட்டம் பிரிப்பதற்கான பணிகள் நடைபெற்று வருவதால், ஏலகிரி எக்ஸ்பிரஸ் ரெயிலை மீண்டும் திருப்பத்தூர் வரையிலும் நீட்டிப்பு செய்தால், பல்வேறு அலுவல் வி‌‌ஷயமாக வந்து செல்லும் மக்களுக்கு பெரிதும் பயனுள்ளதாக இருக்கும் என்று இப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

இதுகுறித்து பா.ம.க. முன்னாள் எம்.எல்.ஏ. டி.கே.ராஜா கூறியதாவது:-

பா.ம.க.வை சோந்த ஏ.கே.மூர்த்தி, அரங்க.வேலு ஆகியோர் ரெயில்வே இணை மந்திரிகளாக இருந்தபோது விடுக்கப்பட்ட கோரிக்கையை ஏற்றும், பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாசும், அப்போதைய மத்திய ரெயில்வே மந்திரி லாலு பிரசாத் யாதவிடமும் வலியுறுத்தி இந்த ரெயில் திருப்பத்தூர் வரையிலும் நீட்டிக்கப்பட்டது.

எனது பதவிக்காலம் முடிவடைந்தவுடன் ரெயில் சேவை நிறுத்தப்பட்டது மிகவும் வேதனையளிக்கிறது. மீண்டும் திருப்பத்தூரில் இருந்து இந்த ரெயில் சேவை மீண்டும் தொடர அனைத்து அரசியல் கட்சியினரும் ஒருங்கிணைந்து முயற்சிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதுகுறித்து ரெயில்வே உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

சென்னையில் இருந்து ஜோலார்பேட்டை வரை சென்னை கோட்டத்துக்கு உட்பட்டதாகும். ஜோலார்பேட்டையில் இருந்து திருப்பத்தூர் வரையான ரெயில்பாதை சேலம் கோட்டத்துக்கு உட்பட்டதாகும். எனவே, ஜோலார்பேட்டை வரையில் சென்னை கோட்டத்துக்குட்பட்ட ரெயில் என்ஜினும், ஜோலார்பேட்டை முதல் திருப்பத்தூர் வரையிலும் சேலம் கோட்டத்துக்குட்பட்ட ரெயில் என்ஜினையும் பொருத்தியே இயக்க வேண்டியுள்ளது.

எனவே, திருப்பத்தூரில் இருந்து ஜோலார்பேட்டை வரை அதிகாலையிலும், அதேபோல் சென்னையிலிருந்து ஜோலார்பேட்டைக்கு இரவு 10.30 மணியளவில் வந்து சேரும் ரெயிலை திருப்பத்தூர் வரை இயக்குவதற்கும், சேலம் ரெயில்வே கோட்டத்தில் இருந்து ரெயில் என்ஜின் டிரைவர், கார்டு ஒருவரையும் பணியில் அமர்த்த வேண்டியுள்ளது. நிர்வாக சிக்கல் காரணமாகவே இந்த ரெயில் ஜோலார்பேட்டையுடன் நிறுத்தப்பட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதனிடையே, இந்த ரெயில் சேவையை தினமும் 300-க்கும் மேற்பட்ட பயணிகள் பயன்படுத்தி வந்ததாகவும், நாளொன்றுக்கு சுமார் ரூ.26 ஆயிரம் வருவாய் கிடைத்து வந்ததாகவும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

எனவே, மக்கள் சேவையையும், வருவாயையும் கருத்தில் கொண்டு மீண்டும் திருப்பத்தூரில் இருந்து சென்னைக்கு ஏலகிரி எக்ஸ்பிரஸ் ரெயிலை நீட்டிப்பு செய்ய வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

Next Story