மனைவி பிரிந்து சென்றதால் புதுமாப்பிள்ளை தூக்குப்போட்டு தற்கொலை தக்கலை அருகே பரிதாபம்


மனைவி பிரிந்து சென்றதால் புதுமாப்பிள்ளை தூக்குப்போட்டு தற்கொலை தக்கலை அருகே பரிதாபம்
x
தினத்தந்தி 17 Oct 2019 4:30 AM IST (Updated: 17 Oct 2019 2:37 AM IST)
t-max-icont-min-icon

தக்கலை அருகே மனைவி பிரிந்து சென்றதால், புதுமாப்பிள்ளை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பத்மநாபபுரம்,

தக்கலை அருகே திருவிதாங்கோடு லெத்தை தெருவைச் சேர்ந்தவர் பாலையன். இவருடை மனைவி ராஜம். இவர்களுடைய மகன் சதீஷ்(வயது 31). இவர் வெளிநாட்டில் ஏ.சி. மெக்கானிக்காக பணியாற்றி வந்தார்.

இந்தநிலையில் சதீசுக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு செய்தனர். இதற்காக கடந்த 2 மாதங்களுக்கு முன் சதீஷ் வெளிநாட்டில் இருந்து விடுமுறையில் ஊர் திரும்பினார்.

அதைத்தொடர்ந்து, அவருக்கு நெல்லை மாவட்டம் பணகுடியைச் சேர்ந்த ஒரு பெண்ணை நிச்சயம் செய்து, கடந்த மாதம் 8-ந்தேதி திருமணம் நடைபெற்றது.

கருத்து வேறுபாடு

திருமணம் முடிந்த 15-வது நாளில் புதுமண தம்பதி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால், புதுப்பெண் கோபித்துக் கொண்டு தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார்.

இதனால், மனமுடைந்த சதீஷ் பலமுறை மனைவியிடம் செல்போனில் தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு அழைத்தும் பயனில்லை.

இந்தநிலையில் நேற்று காலை சதீஷ், மனைவியை சமாதானம் செய்து அழைத்து வர பணகுடிக்கு சென்றார். அங்கு மனைவியுடன் சமாதானம் பேசினார். ஆனால் அவர் வர மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.

தற்கொலை

மனைவி பிரிந்து சென்றதால் சதீஷ் மனமுடைந்தார். இதுபற்றி தனது நண்பர்களிடம் கூறி வருத்தப்பட் டார். பின்னர், வீடு திரும்பிய சதீஷ், பணகுடியில் நடந்த விவரத்தை தாயாரிடம் கூறிவிட்டு தனது அறைக்கு சென்று கதவை பூட்டிக் கொண்டார்.

அதைத்தொடர்ந்து சதீசை இரவு சாப்பாட்டுக்காக, தாயார் ராஜம் அழைக்க, அறை கதவை தட்டினார். ஆனால், கதவு திறக்கப்படவில்லை. இதனால், சந்தேகமடைந்த அவர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அறை கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது அங்கு சதீஷ், தூக்கில் பிணமாக தொங்குவதை கண்ட ராஜம் அதிர்ச்சியில் அலறினார்.

பின்னர், இதுகுறித்து தக்கலை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே இன்ஸ்பெக்டர் அருள்பிரகாஷ் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சதீசின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். மேலும், இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சோகம்

மனைவி பிரிந்து சென்றதால், புதுமாப்பிள்ளை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story