“தி.மு.க. ஊழலை பற்றி பேசுவது சாத்தான் வேதம் ஓதுவதுபோல் உள்ளது” - அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி
“தி.மு.க. ஊழலை பற்றி பேசுவது சாத்தான் வேதம் ஓதுவதுபோல் உள்ளது” என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.
தூத்துக்குடி,
தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தூத்துக்குடியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தூத்துக்குடியில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் முழுஉருவ வெண்கல சிலை அமைக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். மக்களுக்கு அடிப்படை வசதிகளை எல்லாம் நிறைவேற்றி கொடுத்து இருப்பதால்தான் தமிழகத்தில் 31 ஆண்டுகளாக அ.தி.மு.க. ஆட்சியில் இருக்கிறது. மக்கள் ஆதரிக்கும் ஒரே இயக்கமாக அ.தி.மு.க. உள்ளது.
எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் காழ்ப்புணர்ச்சி காரணமாக, எந்த நேரத்திலும் முதல்-அமைச்சர் கனவிலே இருப்பதால், அரசை குறை கூறுவதையே வாடிக்கையாக கொண்டு உள்ளார். சட்டமன்றத்தில் அவர் பேசும்போது, அதற்கு முதல்-அமைச்சர் ஆதாரத்துடன் பதில் அளிப்பார். இதனால் அவர் எதுவும் பேச முடியாமல் அமர்ந்து விடுவார். இல்லையென்றால் வெளிநடப்பு செய்து விடுவார்.
இந்தியாவிலேயே தமிழகம்தான் அமைதிப்பூங்காவாக உள்ளது. மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு உள்ளன. இதன் பிரதிபலிப்பாக நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் மக்கள் அ.தி.மு.க.வுக்கு வாக்களிப்பார்கள். அதன்பிறகு மு.க.ஸ்டாலின் என்ன கருத்து கூறுகிறார் என்பதை பார்ப்போம்.
சீமானின் பேச்சை மக்கள் ரசிக்கவில்லை. அவர் தரம் தாழ்ந்து விமர்சிக்கிறார். அவர் மக்களால் புறக்கணிக்கப்படுவார். அதுதான் அவருக்கு கொடுக்கப்படும் மிகப்பெரிய தண்டனை.
மக்களிடையே தவறான தகவல்களை சொல்வதற்காக மு.க.ஸ்டாலினுக்கு நோபல் பரிசு கொடுக்கலாம் என்று முதல்-அமைச்சர் சொல்லியிருப்பது பொருத்தமாக இருக்கும். ஜனநாயக நாட்டில் ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே ஆட்சி தி.மு.க ஆட்சிதான். தி.மு.க.வுக்கு மூன்றெழுத்து போன்று ஊழலுக்கும் மூன்றெழுத்து. எனவே, அவர்கள் ஊழலை பற்றி பேசுவது சாத்தான் வேதம் ஓதுவதுபோல் உள்ளது.
இடைத்தேர்தலில் 50 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம். மக்கள் எழுச்சி அதிகமாக உள்ளது. நாங்குநேரியில் காங்கிரஸ் தேர்தல் களத்திலேயே இல்லை. அந்த தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த வசந்தகுமார் நாடாளுமன்ற தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்டு அங்கு சென்று விட்டார் என்ற கோபம் மக்களிடையே உள்ளது. எனவே, இந்த இடைத்தேர்தலில் அ.தி.மு.க. மகத்தான வெற்றிபெறும். அ.தி.மு.க அரசுக்குதான் மக்களின் ஆதரவு இருக்கிறது என்பது இந்த தேர்தல் மூலம் தெரியவரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story