மராட்டிய சட்டசபைக்கு திங்கட்கிழமை வாக்குப்பதிவு: அனல் பறக்கும் பிரசாரம் நாளை ஓய்கிறது; தலைவர்கள் தீவிர ஓட்டு வேட்டை


மராட்டிய சட்டசபைக்கு திங்கட்கிழமை வாக்குப்பதிவு: அனல் பறக்கும் பிரசாரம் நாளை ஓய்கிறது; தலைவர்கள் தீவிர ஓட்டு வேட்டை
x
தினத்தந்தி 18 Oct 2019 5:49 AM IST (Updated: 18 Oct 2019 5:49 AM IST)
t-max-icont-min-icon

மராட்டிய சட்டசபை தேர்தல் பிரசாரம் நாளை மாலை ஓய்கிறது. இதையொட்டி நேற்று தலைவர்கள் சூறாவளி பிரசாரம் செய்து வாக்கு சேகரித்தனர். பிரதமர் மோடி 3 பொதுக்கூட்டங்களில் பேசினார்.

மும்பை, 

288 தொகுதிகளை கொண்ட மராட்டிய சட்டசபைக்கு வருகிற திங்கட்கிழமை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல் வெற்றியை தொடர்ந்து பா.ஜனதா, சிவசேனா கட்சிகள் சட்டசபை தேர்தலையும் கூட்டணியாகவே எதிர்கொள்கிறது.

மற்றொருபுறம் முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி இந்த தேர்தலில் தனது பலத்தை நிரூபித்தே ஆகவேண்டிய கட்டாயத்துடன் தேர்தல் களத்தில் இறங்கியுள்ளது.

இதேபோல் பிரகாஷ் அம்பேத்கர் தலைமையிலான வஞ்சித் பகுஜன் அகாடி, ராஜ் தாக்கரே தலைமையிலான நவநிர்மாண் சேனா, பகுஜன் சமாஜ் கட்சி, ஒவைசி தலைமையிலான எம்.ஐ.எம். போன்ற சிறிய கட்சிகளும் இந்த தேர்தலை எதிர்கொள்கின்றன.

இந்த நிலையில் நாளை (சனிக்கிழமை) மாலையுடன் தேர்தல் பிரசாரம் ஓய்வதால் அனைத்து கட்சியினரும் தீவிர ஓட்டுவேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள். இதன் காரணமாக தேர்தல் களம் உச்சக்கட்டத்தை எட்டி உள்ளது. பா.ஜனதா மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தேசிய தலைவர்கள் நேற்று மராட்டியத்திற்கு படையெடுத்தனர்.

இதில் பா.ஜனதா சார்பாக பிரதமர் நரேந்திர மோடி நேற்று ஒரே நாளில் சத்தாரா, புனே, பீட் மாவட்டம் பார்லி ஆகிய 3 இடங்களில் பிரசாரம் செய்து வாக்காளர்களிடம் தங்கள் கட்சிக்கு ஆதரவு திரட்டினார்.

ஜம்மு- காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது பிரிவு நீக்கப்பட்டது, முத்தலாக் தடை சட்டம், பட்னாவிஸ் தலைமையிலான 5 ஆண்டு கால ஆட்சியின் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை பிரசாரத்தில் பேசிய மோடி, தங்கள் கட்சி வேட்பாளர்களுக்காக வாக்கு சேகரித்தார்.

நிப்பாட் தொகுதியில் பிரசாரம் செய்த தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், மாநிலத்தில் நிலவும் வேலையின்மை, விவசாயிகள் பிரச்சினை, பொருளாதார மந்த நிலை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை வாக்காளர்கள் முன் எடுத்து வைத்தார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் கடந்த ஞாயிற்றுக்கிழமை மராட்டியத்தில் 3 பொதுக்கூட்டங்களில் கலந்துகொண்டு பேசியது குறிப்பிடத்தக்கது.

இதேபோல் பா.ஜனதாவின் முக்கிய கூட்டணி கட்சியான சிவசேனாவின் தலைவர் உத்தவ் தாக்கரே பால்கர் மற்றும் பொய்சர் தொகுதிகளிலும், யுவசேனா தலைவர் ஆதித்ய தாக்கரே நாசிக் தொகுதியிலும், நவநிர்மாண் சேனா கட்சி தலைவர் ராஜ் தாக்கரே பிரபாதேவியிலும், முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தனது சொந்த மாவட்டமான நாக்பூரிலும், காங்கிரஸ் தலைவர் அசோக் சவான் நாந்தெட்டிலும் தங்கள் கட்சி வேட்பாளர்களுக்காக சூறாவளி பிரசாரம் செய்தனர்.

பிரசாரம் நாளை ஓய இருப்பதால் இன்றும், நாளையும் கட்சி தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள் சூறாவளி பிரசாரம் செய்ய இருக்கி றார்கள். இறுதி கட்ட பிரசாரத்தையொட்டி கட்சி தொண்டர்களும் தங்களது வேட்பாளர்களுக்காக வீடு, வீடாக சென்று வாக்கு சேகரித்தனர்.

Next Story