தர்மபுரி மாவட்ட ஏரிகளில் காவிரி உபரிநீரை நிரப்பும் திட்டத்திற்கு நிதி ஒதுக்க வேண்டும் - பா.ம.க. செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்
தர்மபுரி மாவட்ட ஏரிகளில் காவிரி உபரிநீரை நிரப்பும் திட்டத்திற்கு நிதி ஒதுக்க வேண்டும் என்று பா.ம.க. செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.
தர்மபுரி,
தர்மபுரி மாவட்ட பா.ம.க. செயற்குழு கூட்டம் தர்மபுரி பெரியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில துணை பொதுச்செயலாளர் வெங்கடேஸ்வரன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு உழவர் பேரியக்க மாநில செயலாளர் இல.வேலுச்சாமி, மாநில துணைத்தலைவர்கள் பாடிசெல்வம், சாந்தமூர்த்தி, மாநில அமைப்பு துணை செயலாளர் சத்தியமூர்த்தி, மேற்கு மாவட்ட செயலாளர் பெரியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிழக்கு மாவட்ட செயலாளர் அரசாங்கம் வரவேற்று பேசினார். கூட்டத்தில் கட்சியின் இணை பொதுச்செயலாளர் இசக்கி படையாச்சி, மாநில அமைப்பு செயலாளர் செல்வக்குமார் ஆகியோர் கலந்து கொண்டு தீர்மானங்கள் குறித்து விளக்கி பேசினார்கள்.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஏரிகளுக்கு மழைநீர் வரும் நீர்வழித்தடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி சீரமைக்க வேண்டும். சிப்காட் தொழிற்பேட்டை அமைப்பதற்கான அடிப்படை வசதிகளை உருவாக்கி புதிய தொழில்கள் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மழைக்காலத்தில் காவிரி ஆற்றில் கரைபுரண்டு ஓடி கடலில் வீணாக கலக்கும் உபரி நீரை தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஏரிகள் மற்றும் குளங்களில் நிரப்பும் திட்டத்திற்கு தமிழக அரசு உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் மருத்துவ முகாம்களை நடத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
இந்த கூட்டத்தில் மாநில இளைஞர் சங்க செயலாளர்கள் முருகசாமி, செந்தில், மாநில செயற்குழு உறுப்பினர்கள் வணங்காமுடி, கோவிந்தசாமி, மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் நம்பிராஜன், சிறப்பு மாவட்ட செயலாளர் சின்னசாமி, மகளிர் சங்க மாநில துணைசெயலாளர் சரவணகுமாரி, இளம்பெண்கள் சங்க மாநில துணைசெயலாளர் சாந்தினி உள்பட கட்சியின் மாநில, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள், சார்பு அமைப்பு பொறுப்பாளர்கள் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் மகளிரணி மாநில நிர்வாகி ஜெயலட்சுமி கருணாநிதி நன்றி கூறினார்.
Related Tags :
Next Story