வெளிநாட்டில் வேலைபார்ப்போருக்கு பிரச்சினை ஏற்பட்டால் இந்திய தூதரகத்தை அணுக வேண்டும் - கலெக்டர் உமா மகேஸ்வரி தகவல்
வெளிநாட்டில் வேலைபார்ப்போருக்கு பிரச்சினை ஏற்பட்டால் இந்திய தூதரகத்தை அணுக வேண்டும் என கலெக்டர் உமா மகேஸ்வரி தெரிவித்து உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டு உள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
புதுக்கோட்டை,
சென்னை அகதிகள் மறுவாழ்வு மற்றும் தமிழகத்திற்கு வெளியே வாழும் தமிழர்கள் நல ஆணையரகம் அறிவுறுத்தி உள்ளவாறு வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் பாதுகாப்பு நலன் கருதி கீழ்காணும் வழிமுறைகளை தவறாமல் கடைபிடிக்க வேண்டும்.
சட்டப்படியான ஆவணங்கள் மற்றும் வேலைக்கான விசாவுடன் முறையாக வெளிநாடு செல்ல வேண்டும். அனைத்து ஆவணங்களின் நகல்களையும் குடும்பத்தினர் மற்றும் தன்வசம் கூடுதலாக வைத்திருக்க வேண்டும். அரசு பதிவு பெற்ற முகவர்கள் மூலமாகவே வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்ல வேண்டும்.
வேலை செய்யும் நாட்டின் சட்ட திட்டங்களே அனைவருக்கும் பொருந்தும். வேலைக்கு செல்லும் நாட்டின் உள் நாட்டு சட்ட திட்டங்கள் மற்றும் கலாசாரங்களை மதித்து நடக்க வேண்டும். வெளிநாடுகளில் பணிபுரியும் இடங்களில் இருந்து ‘‘வெளிச் செல் விசா” பெற்றிடாமல் நாடு திரும்ப இயலாது. ஒப்பந்த காலத்தில் பணிபுரியும் நிறுவனம், முகவர் தவிர வேறு நிறுவனம், முகவரிடம் வேலைக்கு செல்வதில் வரையறைகள் உள்ளது என்பதனை அறிந்திருக்க வேண்டும். வேலைக்கான ஒப்பந்தத்தையும் அதன் நகலையும் எப்பொழுதும் கைவசம் வைத்திருக்க வேண்டும்.
வேலைக்கு செல்பவரின் உரிமைகள், பொறுப்புகள், ஊதியம், வேலையின் தன்மை போன்ற தகவல்கள் அதில் தான் குறிப்பிடப்பட்டு இருக்கும். வெளிநாடுகளில் பிரச்சினைகள் ஏதேனும் ஏற்பட்டால் உடனடியாக இந்திய தூதரகத்தை அணுக வேண்டும். எனவே, வேலைக்கு செல்லும் நாட்டில் உள்ள இந்திய தூதரகங்களின் முகவரி மற்றும் தொலைபேசி எண்களை கைவசம் வைத்திருக்க வேண்டும்.
மேலும் தொழிலாளர்கள் யாதொரு குற்ற செயல்களிலும் ஈடுபட கூடாது. குற்ற செயல்களுக்காக வேலை செய்யும் நாட்டிலோ அல்லது இந்தியாவில் அதற்கான குற்ற வழக்கு தொடரப்படும். வெளிநாடுகளில் போராட்டம் நடத்தவோ, சங்கம் அமைப்பதோ தடை செய்யப்பட்டு உள்ளது. மீறி அவற்றில் கலந்து கொள்பவர்கள் நாடு கடத்தப்படலாம் அல்லது சிறை செல்ல நேரிடலாம்.
கண்டிப்பாக மது வகைகள், போதை பொருட்கள், கடத்தல் பொருட்கள் போன்றவை கொண்டு செல்லக் கூடாது. போதை பொருட்கள், மது வகைகள், திருட்டு, கொள்ளை, ஆபாச வார்த்தைகள் மற்றும் காட்சிகள் போன்றவற்றை பயன்படுத்துவோருக்கு ஆயுள் தண்டனை முதல் மரண தண்டனை வரை கிடைக்க வாய்ப்பு உள்ளது. உள்ளூர் அலுவலர்களின் முறையான அனுமதியின்றி வேறு நிறுவனத்திலோ, முகவரிகளிடமோ வேலைக்கு செல்ல கூடாது.
வாய்மொழியான உத்தரவாதங்களைத் தவிர்த்து, முறையான ஆவணங்களை வலியுறுத்த வேண்டும். மேலும் இது தொடர்பாக புகார் ஏதும் இருப்பின் சென்னை அகதிகள் மறுவாழ்வு மற்றும் தமிழகத்திற்கு வெளியே வாழும் தமிழர்கள் நல ஆணையரக தொலைபேசி எண்: 044-28515288 மற்றும் nrtchennai@tn.gov.in, nrtchennai@gmail.com, https://emigrate.gov.in/ext/, http://madad.gov.in ஆகிய மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தலாம்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story