நெல்லையில் 4,669 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் ரூ.13.89 லட்சம் அபராதம் விதிப்பு


நெல்லையில் 4,669 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் ரூ.13.89 லட்சம் அபராதம் விதிப்பு
x
தினத்தந்தி 22 Oct 2019 10:00 PM GMT (Updated: 22 Oct 2019 8:36 PM GMT)

ல்லை மாநகர பகுதியில் 4 ஆயிரத்து 669 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல் செய்யப்பட்டது. ரூ.13 லட்சத்து 89 ஆயிரம் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது என்று மாநகராட்சி ஆணையாளர் விஜயலட்சுமி தெரிவித்து உள்ளார்.

நெல்லை, 

நெல்லை மாநகர பகுதியில் 4 ஆயிரத்து 669 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல் செய்யப்பட்டது. ரூ.13 லட்சத்து 89 ஆயிரம் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது என்று மாநகராட்சி ஆணையாளர் விஜயலட்சுமி தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பிளாஸ்டிக் பறிமுதல்

ஒருமுறை பயன்படுத்திய பின் தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்வது, சேமிப்பது, வினியோகிப்பது, விற்பனை மற்றும் பயன்படுத்துவது ஆகியன தமிழக அரசால் தடை செய்யப்பட்டு உள்ளது.

இந்த உத்தரவை தொடர்ந்து நெல்லை மாநகராட்சி பகுதிகளில், பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை தடுக்கவும் அவற்றை தினசரி கண்காணிக்கும் விதமாக மாநகராட்சி பணியாளர்களால் உருவாக்கப்பட்ட கண்காணிப்புக்குழு ஆய்வு செய்து வருகிறது.

இந்த ஆய்வின் போது பிளாஸ்டிக் பொருட்கள் கைப்பற்றப்படுவதுடன், உபயோகிப்பாளர் மற்றும் விற்பனை செய்பவர்களுக்கு அபராத தொகையும் விதிக்கப்பட்டு, நேற்று முன்தினம் வரை 13 ஆயிரத்து 428 சிறு மற்றும் குறு நிறுவனங்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவது கண்டறியப்பட்டு, 4 ஆயிரத்து 669 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

மேலும் அந்த நிறுவன உரிமையாளர்களிடம் இருந்து ரூ.13 லட்சத்து 89 ஆயிரத்து 450 அபராத தொகையாக வசூலிக்கப்பட்டு உள்ளது.

நிலவேம்பு கசாயம்

நெல்லை மாநகராட்சி சார்பில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்துவதற்காக நிலவேம்பு கசாயம் நெல்லை பொருட்காட்சி திடல் பஸ்நிலையம், ரெயில் நிலையம், பாளையங்கோட்டை பஸ்நிலையம், புதிய பஸ்நிலையம், கே.டி.சி.நகர், ஜவகர் மைதானம், வண்ணார்பேட்டை ரவுண்டானா, நெல்லையப்பர் கோவில், பேட்டை ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய இடங்களில் இன்று (புதன்கிழமை) முதல் வருகிற 27-ந் தேதி வரை வழங்கப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story