திருவாரூரில் 3,094 பேருக்கு ரூ.43 கோடியில் கடன் உதவி கலெக்டர் வழங்கினார்


திருவாரூரில் 3,094 பேருக்கு ரூ.43 கோடியில் கடன் உதவி கலெக்டர் வழங்கினார்
x
தினத்தந்தி 24 Oct 2019 11:00 PM GMT (Updated: 24 Oct 2019 6:33 PM GMT)

திருவாரூரில் 3,094 பேருக்கு ரூ.43 கோடியில் கடன் உதவிகளை கலெக்டர் ஆனந்த் வழங்கினார்.

திருவாரூர்,

திருவாரூரில் முன்னோடி வங்கிகள் சார்பில் வாடிக்கையாளர் சந்திப்பு முகாம் நேற்று நடந்தது. முகாமிற்கு கலெக்டர் ஆனந்த் தலைமை தாங்கி, 3,094 பேருக்கு ரூ.43 கோடியில் கடன் உதவிகளை வழங்கினார். அப்போது அவர் கூறியதாவது:-

கடன் சார்ந்த திட்டங்கள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அனைத்து வங்கிகளும் இணைந்து முகாம் நடத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டம் விவசாயம் சார்ந்த மாவட்டம், விவசாயிகளின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையிலும் விவசாயம் சார்ந்த கடன் திட்டங்களை தீட்டி செயல்படுத்த வேண்டும். சுய உதவி குழுக்களுக்கு வங்கிகள் மூலம் பல்வேறு கடன் உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. வங்கிகளை பொறுத்த வரையில் வங்கி சேவையை கிராமப்புற மக்களும் பயன்பெறுவதை உறுதி செய்து கொள்ள வேண்டும். வங்கி கடன் சார்ந்த திட்டங்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

விழிப்புணர்வு கண்காட்சி அரங்கு

முன்னதாக 17 முன்னோடி வங்கிகளின் கடன் திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு கண்காட்சி அரங்கு அமைக்கப்பட்டுள்ளதை கலெக்டர் பார்வையிட்டார். இதில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மண்டல பொது மேலாளர் பேட்ரோ, முதன்மை மண்டல மேலாளர் லட்சுமிநரசிம்மன், முன்னோடி வங்கி மேலாளர் எழிலரசன், ஊரக வாழ்வாதார இயக்கத்தின் திட்ட இயக்குனர் ஸ்ரீலேகா மற்றும் வங்கி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Next Story