சத்தியமங்கலத்தில் தொடர் மழை: 2 வீடுகளின் சுவர் இடிந்தது; தொழிலாளி சாவு


சத்தியமங்கலத்தில் தொடர் மழை: 2 வீடுகளின் சுவர் இடிந்தது; தொழிலாளி சாவு
x
தினத்தந்தி 25 Oct 2019 4:15 AM IST (Updated: 25 Oct 2019 12:40 AM IST)
t-max-icont-min-icon

சத்தியமங்கலத்தில் தொடர் மழையால் 2 வீடுகளின் சுவர் இடிந்து விழுந்தது. இதில் தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

சத்தியமங்கலம், 

வடகிழக்கு பருவமழை தொடங்கியதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. அதன்படி ஈரோடு மாவட்டத்திலும் பல இடங்களில் மழை பெய்கிறது. சத்தியமங்கலத்தில் கடந்த 10 நாட்களாக தொடர்ந்து மாலை நேரத்தில் மழை பெய்து வருகிறது. அதேபோல் நேற்று முன்தினமும் மாலை மழை பெய்தது.

சத்தியமங்கலம் ரங்கசமுத்திரத்தை சேர்ந்தவர் பாலாஜி. இவரது பழையவீடு கோவிந்தராஜபுரம் பகுதியில் உள்ளது. இந்த வீட்டின் கதவு, ஜன்னல்களை எடுத்துக்கொள்ளுமாறு கெஞ்சனூர் தண்ணீர் பந்தலை சேர்ந்த தொழிலாளி கிருஷ்ணனிடம் (65) கூறினார்.


அதைத்தொடர்ந்து அவர் நேற்று அங்கு சென்று கடப்பாரையால் உடைத்து கதவை பெயர்த்து எடுத்துக்கொண்டு இருந்தார். ஏற்கனவே அந்த வீட்டின் சுவர் பழுதடைந்திருந்தது. மேலும் தொடர் மழையால் வலுவிழந்து காணப்பட்ட சுவர் சரிந்து கிருஷ்ணன் மீது விழுந்து அமுக்கியது.

இடிபாடுகளுக்குள் சிக்கிய அவர் வலி தாங்க முடியாமல் சத்தம் போட்டார். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு சென்று அவரை மீட்டு சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி கிருஷ்ணன் பரிதாபமாக இறந்தார்.

இதேபோல் சத்தியமங்கலம் வடக்குப்பேட்டை திருநீலகண்டர் கல்யாண மண்டப வீதியில் வசித்து வருபவர் செந்தில்குமார். எலக்ட்ரீசியன். நேற்று அதிகாலை இவர் வீட்டில் படுத்து தூங்கிகொண்டிருந்தார்.

அப்போது திடீரென வீட்டின் மேற்கூரை சரிந்து கீழே விழுந்து சேதம் அடைந்தது. மேலும் மண் சுவரும் இடிந்து விழுந்தது. வீட்டின் ஒருபகுதி மட்டும் இடிந்து விழுந்ததால் சேதம் ஏற்படவில்லை. இதுபற்றி அறிந்ததும் சத்தியமங்கலம் கிராம நிர்வாக அலுவலர் தவிசியப்பன் அங்கு சென்று சேதம் அடைந்த வீட்டை பார்வையிட்டு, பாதிக்கப்பட்டவரிடம் அரசின் நிவாரண தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

Next Story