குடிமங்கலம் பகுதியில் தடுப்பணைகள் நிரம்பி வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி


குடிமங்கலம் பகுதியில் தடுப்பணைகள் நிரம்பி வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி
x
தினத்தந்தி 26 Oct 2019 4:30 AM IST (Updated: 25 Oct 2019 10:39 PM IST)
t-max-icont-min-icon

குடிமங்கலம் பகுதியில் தடுப்பணைகள் நிரம்பி வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

குடிமங்கலம்,

நிலத்தடி நீர்மட்டத்தை மேம்படுத்தும் நோக்கிலும், மழைநீர் வீணாகாமல் சேமிக்கும் நோக்கிலும் தமிழகம் முழுவதும் குடிமராமத்து திட்டத்தின் கீழ் ஏரி, குளம், குட்டைகள் தூர்வாரும் பணிகள் நடைபெற்றுள்ளது. அந்த வகையில் குடிமங்கலம் ஒன்றியத்தில் 89 குளம், குட்டைகள் தூர்வாரப்பட்டுள்ளது.

இது தவிர நீரோடைகள் மற்றும் நீர் வழித்தடங்களின் குறுக்கே தடுப்பணைகள் அமைக்கும் பணியும் நடைபெற்றுள்ளது. அந்தவகையில் குடிமங்கலம் பகுதியில் கடந்த 2 ஆண்டுகளில் உப்பாறு ஓடையில் 26 தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளது. மேலும் 100 நாள் வேலை திட்ட பணியாளர்களை பயன்படுத்தி நீர் வழித்தடங்களில் ஏராளமான சிறு தடுப்பணைகள் அமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் கழிவுநீரை வடிகட்டி பூமிக்குள் அனுப்பும் விதமான கட்டமைப்புகள் மற்றும் தனி நபர் வீடுகளில் வெளியேறும் கழிவுநீரை பூமிக்குள் அனுப்பும் விதமான தனி நபர் உறிஞ்சு குழிகள் என பல்வேறு திட்டங்கள் தொடர்ச்சியாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதனால் குடிமங்கலம் பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் உயர்வதற்கான வாய்ப்புகளை அதிகப்படுத்தி வருகிறோம் என்று அதிகாரிகள் கூறுகிறார்கள். மேலும் இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:-

குடிமங்கலம் பகுதியை பொறுத்தவரை விவசாயமே முக்கிய தொழிலாக உள்ளது. அதிலும் குறிப்பாக தென்னை விவசாயத்தில் ஏராளமான விவசாயிகள் ஈடுபட்டுள்ளார்கள். இந்த நிலையில் போதிய மழை இல்லாததால் ஏற்பட்ட வறட்சியால் தென்னை விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

இதற்கு முக்கிய காரணமாக இருப்பது மழை பொழிவு குறைவு என்றாலும் நிலத்தடி நீர்மட்டம் குறைந்ததால் தென்னை மரங்கள் நீரில்லாமல் காயும் நிலை ஏற்பட்டது. தற்போது இந்த பகுதியில் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தும் வகையில் பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் தடுப்பணைகளில் தண்ணீர் நிரம்பியுள்ளது மகிழ்ச்சி தரும் விஷயமாக உள்ளது.

இவ்வாறு தொடர்ச்சியாக தண்ணீர் தேங்கி நிற்பதால் அருகில் உள்ள விளை நிலங்களில் உள்ள கிணறுகள் மற்றும் ஆழ்குழாய் கிணறுகளில் தண்ணீர் அதிகரித்துள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story