ரெயில் பயணிகளின் உடைமைகளை போலீசார் சோதனை; பட்டாசு கொண்டு செல்லக்கூடாது என எச்சரிக்கை


ரெயில் பயணிகளின் உடைமைகளை போலீசார் சோதனை; பட்டாசு கொண்டு செல்லக்கூடாது என எச்சரிக்கை
x
தினத்தந்தி 26 Oct 2019 4:00 AM IST (Updated: 26 Oct 2019 2:04 AM IST)
t-max-icont-min-icon

ரெயில் பயணிகளின் உடைமைகளை போலீசார் சோதனை செய்தனர். மேலும், பட்டாசு கொண்டு செல்லக்கூடாது என்றும் பயணிகளுக்கு போலீசார் எச்சரிக்கையும் விடுத்தனர்.

ஈரோடு,

தீபாவளி பண்டிகை நாளை (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. இதனால் ஈரோட்டில் வசிக்கும் வெளியூரை சேர்ந்த பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களில் பண்டிகையை கொண்டாட தயாராகி வருகிறார்கள். மேலும், இன்று (சனிக்கிழமை) முதல் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) வரை 3 நாட்களுக்கு அரசு விடுமுறை உள்ளதால் நேற்றில் இருந்தே பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு புறப்பட்டனர்.

இதனால் வெளியூர்களுக்கு செல்லும் பஸ், ரெயில்களில் வழக்கத்தைவிட பயணிகளின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இதையொட்டி ஈரோட்டில் இருந்து வெளியூர்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. குறிப்பாக மதுரை, திருநெல்வேலி போன்ற தென்மாவட்டங்களுக்கு கூடுதலாக பஸ்கள் சென்றன.

ஈரோடு பஸ் நிலையத்தில் பயணிகளின் கூட்டம் அதிகமாக காணப்பட்டதால் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதேபோல் ஈரோடு ரெயில் நிலையத்திலும் ரெயில்வே போலீசாரும், ரெயில்வே பாதுகாப்பு படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

ஈரோடு ரெயில்வே போலீசார் ரெயில் பயணிகளிடம் கூட்ட நெரிசல் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். அப்போது, கூட்ட நெரிசலாக இருப்பதால் திருடர்களின் நடமாட்டம் அதிகமாக இருக்கலாம் என்றும், பணம், நகை உள்ளிட்ட பொருட்களை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் பயணிகளிடம் போலீசார் அறிவுறுத்தினார்கள்.

மேலும் ரெயில் நிலையத்தின் நுழைவு பகுதியில் ேபாலீசார் நின்று கொண்டு பயணிகளிடம், ரெயிலில் பட்டாசு கொண்டு செல்லக்கூடாது என்று எச்சரிக்கை விடுத்தனர். மெட்டல் டிடெக்டர் மூலமும் பயணிகளின் உடைமைகள் சோதனை செய்யப்பட்டது. அப்போது பட்டாசு கொண்டு செல்லப்படுகிறதா? என்றும் அவர்கள் பார்வையிட்டனர்.

இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவகாமி ராணி கூறும்போது, ரெயில்களில் பட்டாசு கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. தடையை மீறி பட்டாசு கொண்டு செல்வது கண்டறியப்பட்டால் 6 மாத சிறை தண்டனை அல்லது ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும், என்றார்.

Next Story