ஊராட்சிகளில் விளையாட்டு மைதானம் அமைக்க நடவடிக்கை - கலெக்டர் தகவல்


ஊராட்சிகளில் விளையாட்டு மைதானம் அமைக்க நடவடிக்கை - கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 26 Oct 2019 4:30 AM IST (Updated: 26 Oct 2019 2:33 AM IST)
t-max-icont-min-icon

மாவட்டத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் விளையாட்டு மைதானம் அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று கலெக்டர் தெரிவித்தார்.

சிவகங்கை,

மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் மாவட்ட அளவிலான கேரம் விளையாட்டு போட்டிகள் சிவகங்கையில் நடைபெற்றது. போட்டியில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கும் விழா, கலெக்டர் ஜெயகாந்தன் தலைமையில் நடைபெற்றது. விழாவில் பரிசுகள் வழங்கி கலெக்டர் பேசியதாவது:-

விளையாட்டு என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் மிக அவசியமான ஒன்றாகும். வெற்றி பெற்றால் தான் விளையாட்டில் கலந்து கொள்ள வேண்டும் என்ற நிலைப்பாட்டில் யாரும் இருக்கக்கூடாது. முயற்சித்தால் எல்லோருக்கும் வெற்றி கிட்டும். முன்பெல்லாம் நகர் புறங்களில் மட்டும் தான் விளையாடுவதற்கான வசதிகள் அமைக்கப்பட்டிருந்தது.

தற்போது கிராம பகுதிகளிலும் இளைஞர்கள் விளையாட்டில் ஆர்வம் காட்ட வேண்டும் என்ற நோக்குடன் முதல்-அமைச்சர் உத்தரவின் பேரில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் அம்மா விளையாட்டு மைதானம் அமைத்திட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன்படி அனைத்து பகுதிகளிலும் தேவையான மைதானம் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள். அதற்கான இடங்கள் உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் சர்வேயர் மூலம் இடம் தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. மாணவ-மாணவிகள் மற்றும் விளையாட்டில் ஆர்வம் உள்ளவர்களை ஊக்கப்படுத்த அரசு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தி வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு அலுவலர் தீர்த்தோஸ், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் சூரன், கேரம் மாவட்ட தலைவர் குருசேகர், பயிற்றுனர்கள் கார்த்திக் அபுதாஹிர், பால்பாண்டித்துரை, ஆறுமுகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story