அ.தி.மு.க. இடைத்தேர்தல் வெற்றி உள்ளாட்சித் தேர்தலிலும் பிரதிபலிக்கும் - ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. பேச்சு


அ.தி.மு.க. இடைத்தேர்தல் வெற்றி உள்ளாட்சித் தேர்தலிலும் பிரதிபலிக்கும் - ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. பேச்சு
x
தினத்தந்தி 27 Oct 2019 4:45 AM IST (Updated: 27 Oct 2019 3:56 AM IST)
t-max-icont-min-icon

விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு கிடைத்த வெற்றி உள்ளாட்சித் தேர்தலிலும் பிரதிபலிக்கும் என்று மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. பேசினார்.

திருப்பரங்குன்றம்,

திருப்பரங்குன்றத்தை அடுத்த நிலையூர் கைத்தறி நகரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் அ.தி.மு.க. ஒன்றிய நிர்வாகிகளின் செயல்வீரர் கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் நிலையூர் முருகன் தலைமை தாங்கினார். பொதுக்குழு உறுப்பினர் முத்துக்குமார் வரவேற்றார். எம்.ஜி.ஆர். இளைஞர் அணி மாவட்ட செயலாளர் வக்கீல் ரமேஷ் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. கலந்துகொண்டு பேசியதாவது:- நாம் பணியாற்றிய நாங்குனேரி தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் அமோக வெற்றி பெற்றுள்ளோம்.

அதேபோல விக்கிரவாண்டி தொகுதியிலும் அ.தி.மு.க வெற்றி பெற்று இருப்பது கழகத்தின் நிரந்தர பொதுச் செயலாளராக இருந்து நம்மையெல்லாம் கட்டிக்காத்து தொண்டர்களின் தாயாக இருந்து வந்த புரட்சித்தலைவி தனக்குப் பின்னாலும் நூறு ஆண்டுகள் அ.தி.மு.க. இருக்கும் என்று கூறியதை மக்கள் நினைவூட்டி இருப்பதை உணர முடிகிறது.

மக்களால் நான் மக்களுக்காகவே நான் என்று உழைத்த புரட்சித்தலைவி இந்த மண்ணை விட்டு மறைந்தாலும் மக்கள் மனதை விட்டு மறையாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

புரட்சித் தலைவரும், புரட்சித் தலைவியும் மக்களுக்காக செய்த சாதனை மக்கள் மனதில் நீங்காத இடம்பெற்றிருக்கிறது. அதேபோல புரட்சித்தலைவர் கண்ட சின்னமான இரட்டை இலையும் மக்கள் மனதோடு ஒன்றிப்போய் உள்ளது. நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்தாலும் இடைத்தேர்தலில் பெற்ற வெற்றியானது உள்ளாட்சித் தேர்தலிலும் உறுதியை நிலைநாட்டும். தீபாவளி முடிந்ததும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் தலைமையிலான அம்மா கொண்டு வந்த திட்டங்கள் யாவும் முழுமையாக செயல்படுத்துகிற அம்மா அரசின் சாதனைகளை மக்களிடம் எடுத்து கூறி எதிர்க்கட்சிகள் டெபாசிட் இழக்கும் வகையில் உள்ளாட்சி தேர்தலில் அமோக வெற்றிபெற அயராது பாடுபடவேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story