ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்காக அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணறுகளை மூடவேண்டும் பொதுமக்கள் வேண்டுகோள்


ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்காக அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணறுகளை மூடவேண்டும் பொதுமக்கள் வேண்டுகோள்
x
தினத்தந்தி 29 Oct 2019 4:30 AM IST (Updated: 29 Oct 2019 12:54 AM IST)
t-max-icont-min-icon

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்காக அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணறுகளை மூடவேண்டும் என்று அரியலூர் மாவட்ட பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அரியலூர்,

இந்தியாவில் பயன்படுத்தப்படும் பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருளில் பெரும்பாலானவை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. அதேபோல எரிவாயும் இறக்குமதி செய்யப்படுகிறது. இதனால் மாற்று ஏற்பாடாக எரிபொருள்களை உற்பத்தி செய்யும் திட்டங்களை மத்திய அரசு தொடங்கி உள்ளது. அதில் ஒன்று தான் ஹைட்ரோ கார்பன் திட்டம். நாம் பயன்படுத்தும் பெட்ரோலிய பொருட்களில் ஹைட்ரஜனும், கார்பனும் கலந்துள்ளது. அவைதான் எரிபொருளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதேபோன்று ஹைட்ரஜனும், கார்பனும் கலந்த பல்வேறு வகையான எரிபொருள்கள் பூமிக்கு அடியில் வாயுவாக தேங்கி உள்ளன. அவை மீத்தேன், புரோபைன், பியூடேன், ஈத்தேன், பென்டேன் என்று அழைக்கப்படுகின்றன. இவை ஒவ்வொன்றும் எரிபொருள் ஆகும். அதாவது ஹைட்ரஜன் அணுக்களும், கார்பன் அணுக்களும் எந்த வகையில் ஒன்றோடு ஒன்று கலந்திருக்கின்றன என்பதன் அடிப்படையில் இவற்றிற்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது.

கிணறுகளை தோண்டி ஆய்வு

இவ்வாறு அணுக்கள் சேர்மானத்தின் அடிப்படையில் ஒவ்வொரு எரிபொருளும் உள்ளன. இவற்றை ஒட்டுமொத்தமாக ஹைட்ரோ கார்பன் என்று அழைக்கிறார்கள். பூமிக்கு அடியில் இவைகள் பாறைகளின் இடுக்குகளில் ஆங்காங்கே ஏராளமாக தேங்கி நிற்கின்றன. இந்தியாவின் சில பகுதிகளில் இவை அதிகமாக காணப்படுகின்றன. அவ்வாறு அதிகமாக காணப்படும் பகுதிகளில் தமிழகமும் ஒன்று. இவற்றை தோண்டி எடுப்பதற்கு தான் இப்போது தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இவற்றை தோண்டி எடுக்கும் பணிகளை மத்திய அரசுக்கு சொந்தமான ஓ.என்.ஜி.சி., ஆயில் இந்தியா நிறுவனங்கள் செய்து வந்தன. ஆனால் இந்த நிறுவனங்களால் பெருமளவு பணத்தை செலவிட்டு பணிகளை செய்ய முடியவில்லை. எனவே தனியாருக்கு இது ஒப்படைக்கப்பட்டுள்ளது. அவற்றை தோண்டி எடுப்பதற்காக அரியலூர் மாவட்டத்தில் அரியலூர், திருமானூர், தா.பழூர் ஆகிய பகுதிகளில் உள்ள மருதையாறு, கொள்ளிடம் ஆற்றங்கரைகளில் மத்திய அரசின் இயற்கை எரிவாயு நிறுவனம் (ஓ.என்.ஜி.சி.) சார்பில் ஆங்காங்கே பல இடங்களில் ஆயிரம் அடி ஆழத்திற்கு, 2 அடி அகலம் உள்ள ஆழ்துளை கிணறுகள் தோண்டப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. அவற்றில் பல ஆழ்துளை கிணறுகள் மூடப்படாமல் அப்படியே உள்ளது.

மூடாமல்...

தற்போது திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுப்பட்டியை சேர்ந்த பிரிட்டோ என்பவரது மகன் சுஜித்வில்சன்(வயது 2) ஆழ்துளை கிணற்றில் விழுந்துவிட்டான். அவனை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள பயன்பாடற்ற அனைத்து ஆழ்துளை கிணறுகளையும் மூடவேண்டும் என்று பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், பயனின்றி உள்ள ஆழ்துளை கிணறுகளை மூடாமல் அப்படியே விட்டுவிடுவதால் அவற்றில் குழந்தைகள் தவறி விழுந்து இறக்க நேரிடுகிறது. எனவே, பயனின்றிக் கிடக்கும் ஆழ்துளை கிணறுகளை மூட வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற உத்தரவை அனைத்து உள்ளாட்சி அமைப்புகளும் அமல்படுத்த வேண்டும். ஒரு நிலத்தில் ஆழ்குழாய் கிணறு அமைக்க அந்த நிலத்தின் உரிமையாளர் முடிவு செய்தால், கிணற்றை அமைப்பதற்கு முன்பாக எழுத்து மூலமாக சம்பந்தப்பட்ட உள்ளாட்சி நிர்வாகத்துக்கும், மாவட்ட கலெக்டருக்கு மனு அளித்து அனுமதி பெற வேண்டும்.

சரி செய்ய வேண்டும்

ஆழ்துளை கிணறு அமைக்கும்போது அந்த இடத்தைச் சுற்றி முள்வேலி அல்லது தகுந்த வேறொரு பாதுகாப்பு அரண் அமைக்கப்பட வேண்டும் என்றனர். அனைத்து உபயோகமற்ற ஆழ்துளை கிணறு மற்றும் குழாய் கிணறுகளை களிமண் மணல், கல், கூழாங்கல் அல்லது ஆழ்துளை கிணற்றில் இருந்து வெட்டி எடுக்கப்பட்ட துகள்களை கொண்டு அடியில் இருந்து தரைமட்டம் வரை மூட வேண்டும். அனைத்து இடங்களிலும் ஆழ்துளை கிணற்றுப் பணி முடிந்த பிறகு பணி நடைபெறுவதற்கு முன்னதாக அப்பணியிடம் முன்பு எப்படி இருந்ததோ? அதே நிலைக்கு மீண்டும் அந்த இடத்தை சரி செய்ய வேண்டும். அப்போது தான் இதுபோன்ற விபத்துகளை தடுக்க முடியும். எனவே ஓ.என்.ஜி.சி. நிறுவனம் சார்பில் தோண்டப்பட்ட ஆழ்துளை கிணறுகளை ஆய்வு செய்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மூடவேண்டும். இல்லை என்றால் நடுக்காட்டுப்பட்டி சம்பவம் போல் மேலும் பல சம்பவங்கள் நடைபெற வாய்ப்பு உள்ளது என்றனர். 

Next Story