மேல்மிடாலம் பகுதியில் கடல் சீற்றம் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது; மீனவர்கள் சாலை மறியல்


மேல்மிடாலம் பகுதியில் கடல் சீற்றம் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது; மீனவர்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 28 Oct 2019 11:00 PM GMT (Updated: 28 Oct 2019 8:31 PM GMT)

மேல்மிடாலம் பகுதியில் கடல் சீற்றம் காரணமாக வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் மீனவர்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தி 7 பஸ்களை சிறைபிடித்தனர்.

கருங்கல்,

குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. குமரி கடற்பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சூறைக்காற்று வீசுகிறது.

அரபிக்கடல் பகுதியில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியுள்ளதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

வீடுகளுக்குள் கடல்நீர்...

இதற்கிடையே குமரி மேற்கு கடற்கரையில் பூத்துறை, சின்னத்துறை, இரையுமன்துறை, மேல்மிடாலம், மிடாலம் ஆகிய மீனவ கிராமங்களில் கடல் சீற்றத்தால் ராட்சத அலைகள் எழுந்து கரையோர பகுதிகளில் உள்ள சுமார் 50-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் கடல்நீர் புகுந்தது. கடல்நீர் புகுந்ததால் வீடுகளில் வசித்த பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகினார்கள்.

இதுபற்றி மீன்வளத்துறை அதிகாரிகளுக்கும், மாவட்ட நிர்வாகம் மற்றும் அரசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனாலும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

பஸ்கள் சிறைபிடிப்பு

இதனால், ஆத்திரமடைந்த மீனவ கிராம மக்கள் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் மேல்மிடாலம் சந்திப்பில் நேற்று அதிகாலை 6 மணியளவில் திரண்டனர். பின்னர், அவர்கள் அந்த வழியாக வந்த 7 அரசு பஸ்களை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுபற்றி தகவல் அறிந்த கருங்கல் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, பொதுமக்கள் அரசு அதிகாரிகள் வந்து பேச்சுவார்த்தை நடத்தினால் மட்டுமே கலைந்து செல்வோம் என்று கூறி போராட்டத்தை தொடர்ந்தனர். இதற்கிடையே ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீனவ மக்களுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டார்.

பேச்சுவார்த்தை

இதுபற்றி தகவல் அறிந்த கிள்ளியூர் தாசில்தார் கோலப்பன், வருவாய் ஆய்வாளர் கீதா ஆகியோர் அங்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, பாதிக்கப்பட்ட பகுதிகளில் அலைத்தடுப்பு சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி கூறியதை தொடர்ந்து பகல் 12 மணியளவில் மீனவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.


Next Story