கூடலூர் பகுதியில், பயனற்ற ஆழ்துளை கிணறுகளால் பொதுமக்கள் அச்சம் - நடவடிக்கை எடுக்க கோரிக்கை


கூடலூர் பகுதியில், பயனற்ற ஆழ்துளை கிணறுகளால் பொதுமக்கள் அச்சம் - நடவடிக்கை எடுக்க கோரிக்கை
x
தினத்தந்தி 29 Oct 2019 10:15 PM GMT (Updated: 29 Oct 2019 5:41 PM GMT)

கூடலூர் பகுதியில் பயனற்று திறந்த நிலையில் கிடக்கும் ஆழ்துளை கிணறுகளால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். மேலும் அந்த ஆழ்துளை கிணறுகளை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

கூடலூர்,

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் பராமரிப்பின்றி விடப்பட்ட ஆழ்துளை கிணற்றில் சுஜித் வில்சன் என்ற 2 வயது குழந்தை கடந்த 25-ந் தேதி மாலை 5.30 மணிக்கு தவறி விழுந்தான். இதைத்தொடர்ந்து தமிழக அமைச்சர்கள், அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து குழந்தையை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதற்காக என்.எல்.சி. ரிக் எந்திரங்கள் கொண்டு வரப்பட்டு ஆழ்துளை கிணறு அருகே மற்றொரு பள்ளம் தோண்டப்பட்டது. ஆனால் கடினமான பாறைகள் இருந்ததால் பள்ளம் தோண்டும் பணியில் தொய்வு ஏற்பட்டது.

சுமார் 70 மணி நேரத்துக்கும் மேலாக போராடி குழந்தை விழுந்த ஆழ்துளை கிணற்றின் அருகே மற்றொரு பள்ளம் தோண்டப்பட்டது. ஆனாலும் இந்த முயற்சி தோல்வியடைந்து. இதற்கிடையில் ஆழ்துளை கிணற்றில் இருந்து துர்நாற்றம் வந்ததால் குழந்தை இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து குழந்தையின் உடல் மீட்கப்பட்டது. இந்த சம்பவம் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே ஆழ்துளை கிணறுகளால் பல உயிரிழப்புகள் நடைபெற்றுள்ள நிலையில் இனி வரும் காலங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகளை கடுமையாக மேற்கொள்ள வேண்டும் என அனைத்து தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். இதை உறுதி செய்யும் வகையில் பயனற்ற மற்றும் பாதுகாப்பற்ற நிலையில் ஆழ்துளை கிணறுகளை வைத்திருக்கும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்த நிலையில் கூடலூர் பகுதியிலும் பயனற்ற நிலையில் ஆழ்துளை கிணறுகள் உள்ளதாக பொதுமக்கள் அச்சத்துடன் கூறினர். கூடலூர் செம்பாலாவில் இருந்து ஈட்டிமூலாவில் உள்ள வனச்சரக அலுவலகத்துக்கு திரும்பும் வளைவில் புதர்களுக்கு இடையே ஆபத்தான முறையில் திறந்த நிலையில் ஆழ்துளை கிணறு ஒன்று உள்ளது. வன அலுவலர் குடியிருப்புகளுக்கு தண்ணீர் வழங்குவதற்காக சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த கிணறு தோண்டப்பட்டதாக கூறப்படு கிறது.

ஆனால் தற்போது பராமரிப்பின்றி எந்தவித பாதுகாப்பும் இல்லாத சூழலில் ஆழ்துளை கிணறு உள்ளது. இதனால் உயிர் சேதங்கள் ஏற்படும் அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இதேபோல் கூடலூர் தாலுகா ஸ்ரீமதுரை ஊராட்சி மண்வயல் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே பயனற்ற நிலையில் ஆழ்துளை கிணறு உள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்பு தோண்டப்பட்ட கிணற்றில் தண்ணீர் இல்லாததால் திறந்த நிலையில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதேபோல் பல இடங்களில் ஆழ்துளை கிணறுகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் ஆய்வு நடத்தி ஆழ்துளை கிணறுகளை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது குழந்தைகள் தவறி விழுந்து விடாதவகையில் கிணற்றை சுற்றிலும் பாதுகாப்பு சுவர்கள் கட்ட வேண்டும் என அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். மேலும் பொறுப்பற்ற முறையில் ஆழ்துளை கிணறுகளை வைத்திருக்கும் நபர்களை கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளனர்.

Next Story