குருப்பெயர்ச்சி விழாவையொட்டி ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில் திரளான பக்தர்கள் தரிசனம்


குருப்பெயர்ச்சி விழாவையொட்டி ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில் திரளான பக்தர்கள் தரிசனம்
x
தினத்தந்தி 30 Oct 2019 4:00 AM IST (Updated: 30 Oct 2019 12:26 AM IST)
t-max-icont-min-icon

குருப்பெயர்ச்சி விழாவையொட்டி ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

நீடாமங்கலம்,

ஒவ்வொரு ஆண்டும் குருபகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி அடைவார். அதன்படி இந்த ஆண்டு நேற்று அதிகாலை 3.49 மணிக்கு குருபகவான், விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு பெயர்ச்சி அடைந்தார். இதனையொட்டி நவக்கிரக ஸ்தலங்களில் ஒன்றாக போற்றப்படும் திருவாரூர் மாவட்டம் ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் குருப்பெயர்ச்சி விழா வெகு விமரிசையாக நடைபெறும்.

அதன்படி நேற்று இந்த கோவிலில் குருப்பெயர்ச்சி விழா வெகு விமரிசையாக நடந்தது. விழாவையொட்டி குருபகவானுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டது. பஞ்சமூர்த்திகளுக்கு சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.

மகாதீபாராதனை

அதிகாலை 3.49 மணிக்கு குருபகவான் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு பெயர்ச்சி அடைந்த நேரத்தில் தங்க கவச அலங்காரத்தில் அருள்பாலித்த குருபகவானுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அப்போது அங்கு திரண்டு இருந்த திரளான பக்தர்கள் குருபகவானை தரிசனம் செய்தனர்.

உற்சவர் தெட்சிணாமூர்த்திக்கும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. பின்னர் உற்சவர் தெட்சிணாமூர்த்தி, குருபகவான் சன்னதி எதிரே உள்ள பிரகார மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

திரளான பக்தர்கள் தரிசனம்

குருப்பெயர்ச்சி விழாவில் முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், பாரதீய ஜனதா மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம், திருவாரூர் மாவட்ட பா.ஜ.க. தலைவர் பேட்டை சிவா, முன்னாள் எம்.எல்.ஏ. பாப்பா சுப்பிரமணியம் உள்ளிட்ட திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று குருபகவானை வழிபட்டனர்.

திருவாரூர் மாவட்டத்தில் நேற்று முன்தினமும், நேற்றும் இடைவிடாது மழை பெய்தது. ஆனால் மழையையும் பொருட்படுத்தாமல் திரளான பக்தர்கள் பல்வேறு ஊர்களில் இருந்து கோவிலுக்கு வருகை தந்து சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் கோவிலுக்கு வந்து செல்ல வசதியாக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. குருப்பெயர்ச்சி விழாவையொட்டி நாளை(31-ந் தேதி) முதல் நவம்பர் மாதம் 7-ந் தேதி வரை இரண்டாவது கட்ட லட்சார்ச்சனை நடக்கிறது.

Next Story