பாலக்காடு அருகே கேரள போலீசார் மீண்டும் தாக்குதல்: மாவோயிஸ்டு முக்கிய தலைவன் சுட்டுக்கொலை - ஓமலூரை சேர்ந்தவன்


பாலக்காடு அருகே கேரள போலீசார் மீண்டும் தாக்குதல்: மாவோயிஸ்டு முக்கிய தலைவன் சுட்டுக்கொலை - ஓமலூரை சேர்ந்தவன்
x
தினத்தந்தி 30 Oct 2019 4:45 AM IST (Updated: 30 Oct 2019 4:49 AM IST)
t-max-icont-min-icon

பாலக்காடு அருகே கேரள தண்டர்போல்டு போலீசார் நேற்று மீண்டும் நடத்திய துப்பாக்கி சூட்டில் ஓமலூரை சேர்ந்த மாவோயிஸ்டு முக்கிய தலைவன் சுட்டுக்கொல்லப்பட்டான்.

கோவை,

தமிழக எல்லை பகுதியை ஒட்டி உள்ள கேரள மாவட்டங்களான பாலக்காடு, கோழிக்கோடு, வயநாடு மற்றும் அகழி, அட்டப்பாடி, நிலம்பூர் உள்பட பல்வேறு பகுதிகளில் மாவோயிஸ்டுகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இவர்கள் அவ்வப்போது மலையோர கிராமங்கள் மற்றும் அடர்ந்த வனப்பகுதியில் இருக்கும் ஆதிவாசி மக்களை சந்தித்து மூளைச்சலவை செய்து வருகிறார்கள்.

அத்துடன் அவர்கள் மலையோர கிராமங்களில் உள்ள போலீஸ் நிலையங்கள், வனத்துறை அலுவலகங்கள் மீது தாக்குதலும் நடத்தி வருகிறார்கள். இதைத்தடுக்க கேரள அரசு தண்டர்போல்டு என்று அழைக்கப்படும் சிறப்பு அதிரடிப்படை போலீஸ் பிரிவை ஏற்படுத்தினர். இந்த போலீசார் வனப்பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் சிறப்பு அதிரடிப்படை போலீசார் பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடி அருகே உள்ள மஞ்சக்கண்டி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு ரோட்டில் இருந்து 5 கி.மீ. தூரத்தில் அடர்ந்த வனப்பகுதிக்குள் மாவோயிஸ்டுகளின் சிறுவாணி தள பிரிவின் ரகசிய கூட்டம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு 7 மாவோயிஸ்டுகள் பதுங்கி இருந்தது தெரியவந்தது. இதை யடுத்து தண்டர்போல்டு போலீசார் அவர்களை சுற்றி வளைத்தனர். பின்னர் அந்த மாவோயிஸ்டுகளை சரணடையுமாறு கூறினார்கள். ஆனால் அவர்கள் சரண் அடைய மறுத்து போலீசார் மீது துப்பாக்கியால் சுட்டனர். உடனே போலீசாரும் பதிலுக்கு துப்பாக்கி சூடு நடத்தினார்கள்.

இருதரப்பினர் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்தது. ஒரு மணி நேரம் நடந்த இந்த துப்பாக்கி சண்டையில் மாவோயிஸ்டுகளான தமிழகத்தில் உள்ள தர்மபுரியை சேர்ந்த கார்த்திக் (வயது 35), கர்நாடகாவை சேர்ந்த சுரேஷ், ஸ்ரீமதி ஆகியோர் குண்டு துளைத்ததில் படுகாயங்களுடன் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

கர்நாடகாவை சேர்ந்த சோனா என்பவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவரை மாவோயிஸ்டு முக்கிய தலைவனான சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்த மணிவாசகம் (63) மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த லட்சுமி (30), கர்நாடகாவை சேர்ந்த சந்துரு என்கிற தீபக் ஆகியோர் தூக்கிக்கொண்டு அடர்ந்த வனப்பகுதிக்குள் தப்பிச் சென்றனர்.

பின்னர் சிறப்பு அதிரடிப்படை போலீசார் பலியான 3 பேரின் உடலை மீட்டனர். ஆனால் அந்தப்பகுதி அடர்ந்த வனப்பகுதி என்பதாலும், தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருப்பதாலும், 3 பேரின் உடலை வெளியே எடுத்து வருவதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் அந்தப்பகுதியில் இரவு முழுவதும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். நேற்று காலையில் இருந்து மீண்டும் கண்காணிப்பு பணி தொடங்கியது.

துப்பாக்கி சண்டை நடந்த இடத்தின் அருகே மாவோயிஸ்டுகள் தற்காலிக ஷெட் அமைத்து இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். அதற்குள் இருந்து மருந்து, மாத்திரைகள், முக்கிய டைரிகள், துணிகள், உணவு பொருட்கள் உள்பட பல்வேறு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

சம்பவம் நடந்த இடத்துக்கு கேரள போலீஸ் உயர் அதிகாரிகள் மற்றும் தமிழக கியூ பிரிவு போலீஸ் சூப்பிரண்டு தர்மராஜன் மற்றும் உயர் அதிகாரிகள் விரைந்து சென்றனர். தொடர்ந்து சம்பவம் நடந்த இடத்தில் சிறப்பு அதிரடிப்படையினர் அங்கு துப்பாக்கிகளுடன் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் நேற்று பிற்பகல் 12 மணியளவில் துப்பாக்கி சண்டை நடந்த இடத்தில் இருந்து 500 மீட்டர் தூரத்தில் சென்றபோது, திடீரென்று 3 மாவோயிஸ்டுகள் சிறப்பு அதிரடிப்படை போலீசார் மீது மீண்டும் துப்பாக்கி சூடு நடத்தினார்கள். பதிலுக்கு போலீசாரும் துப்பாக்கியால் சுட்டனர். அரை மணி நேரம் இந்த துப்பாக்கி சூடு நடந்தது.

இதில் மாவோயிஸ்டு முக்கிய தலைவனான சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்த மணிவாசகம் சுட்டுக்கொல்லப்பட்டார். உடன் இருந்த லட்சுமி, சந்து என்கிற தீபக் ஆகியோர் குண்டு காயங்களுடன் வனப்பகுதிக்குள் தப்பி ஓடிவிட்டனர். அவர்களை போலீசார் துரத்தி சென்றனர். அப்போது சிறிது தூரம் வரை ரத்தக்கறை படிந்து இருந்தது. பின்னர் அந்த கறையும் அங்கு இல்லை.

இதனால் தொடர்ந்து அந்தப்பகுதி முழுவதும் போலீசார் அவர்களை தேடினார்கள். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை. இதை தொடர்ந்து தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. ஏற்கனவே நேற்று முன்தினம் படுகாயம் அடைந்த சோனாவையும் கண்டுபிடிக்க முடியவில்லை, தற்போது படுகாயம் அடைந்த லட்சுமி, தீபக் ஆகியோரையும் காணவில்லை என்பதால், அவர்கள் 3 பேரும் தமிழக-கேரள எல்லையில் உள்ள ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்களா என்பது குறித்து சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

மேலும் அவர்கள் தமிழகத்துக்கு தப்பி வர வாய்ப்பு இருப்பதால் தமிழக எல்லையான கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து சோதனை சாவடிகளிலும் போலீசார் உஷார் படுத்தப்பட்டு உள்ளனர். அங்கு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீசார் நியமிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். கேரளாவில் இருந்து தமிழகத்துக்கு வரும் அனைத்து வாகனங்களும் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகிறது.

இதுதவிர கோவை, நீலகிரி மாவட்டத்தில் உள்ள மலையோர கிராமங்கள், வனப்பகுதிக்குள் இருக்கும் மலைக்கிராமங்களில் தமிழகத்தை சேர்ந்த நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் ரோந்து சென்று வருகிறார்கள். அங்குள்ள மலைவாழ் மக்களிடம் படுகாயத்துடன் மாவோயிஸ்டுகள் யாரும் வந்தார்களா என்பது குறித்தும் விசாரணை நடத்தியதுடன், சந்தேக நபர்கள் வந்தால் உடனடியாக தகவல் தெரிவிக்கும்படியும் அறிவுறுத்தினார்கள்.

அதுபோன்று தமிழக-கேரள எல்லை பகுதியில் உள்ள மருந்து கடைகளிலும் யாராவது காயங்களுக்கு மருந்து வாங்கிச்சென்றனரா என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அதுபோன்று பலியான 4 மாவோயிஸ்டுகளின் உடலை மீட்டு வனப்பகுதியை விட்டு வெளியே கொண்டு வரவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே துப்பாக்கி சூட்டில் பலியான சோனா இறந்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் அதை போலீசார் இன்னும் உறுதி செய்யவில்லை. அவர் படுகாயம் அடைந்ததால் அவரை மாவோயிஸ்டுகள் தூக்கிச்சென்றுவிட்டனர். ஆனால் அவர் உயிருடன் இருக்கிறாரா என்பது தெரியவில்லை என்று போலீசார் அறிவித்து உள்ளனர். இது குறித்து தமிழக போலீஸ் உயர் அதிகாரிகள் கூறியதாவது:-

கடந்த சில மாதங்களுக்கு முன்பு சுட்டுக்கொல்லப்பட்ட மாவோயிஸ்டு தலைவன் குப்பு தேவராஜூக்கு அடுத்து மணிவாசகம்தான் தலைவனாக இருந்து உள்ளான். இவன் மீது தர்மபுரியில் இளைஞர்களை மூளைச்சலவை செய்ததாக ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதுபோன்று நேற்று நடந்த துப்பாக்கி சூட்டில் படுகாயம் அடைந்த திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த லட்சுமியும், கடந்த ஆண்டில் தமிழக-ஆந்திரா எல்லையில் கைதான பெண் மாவோயிஸ்டு செண்பகவள்ளியும் ஒரே நேரத்தில் இந்த இயக்கத்தில் சேர்ந்தவர்கள்.

தற்போது செண்பகவள்ளி மதுரை சிறையில் உள்ளார். ஆந்திரா பகுதியில் இருந்த லட்சுமி கேரளாவுக்கு சென்று உள்ளார். தற்போது கேரளாவில் உள்ள மாவோயிஸ்டுகள் இயக்கத்தில் இருப்பவர்களில் பலர் தமிழர்கள் என்று கூறப்படுகிறது. எனவே அவர்கள் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர்கள் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் பெண் மாவோயிஸ்டான சோனா நிலை குறித்து உறுதியான தகவல் கிடைக்கவில்லை.

கேரளாவில் துப்பாக்கி சண்டை நடந்த பகுதி தமிழக எல்லையில் இருந்து 21 கி.மீ. தூரத்தில் உள்ளது. இருந்தபோதிலும் துப்பாக்கி சூட்டில் படுகாயம் அடைந்தவர்கள் தமிழகத்துக்குள் வருவதை தடுக்க வனப்பகுதியில் நக்சல் தடுப்பு பிரிவு மற்றும் சத்தியமங்கலத்தை சேர்ந்த அதிரடிப்படையை சேர்ந்த போலீசார் தீவிர சோதனை செய்து வருகிறார்கள்.

கோவை மாவட்டத்தில் 45-க்கும் மேற்பட்ட மலைவாழ் கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் சந்தேக நபர்கள் யாராவது வந்தால் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அதுபோன்று நேற்று நடந்த துப்பாக்கி சூட்டில் படுகாயம் அடைந்து தப்பி ஓடிய லட்சுமி, தீபக் ஆகியோரின் புகைப்படங்களை கேரள போலீசார் வெளியிட்டு உள்ளனர். அவர்கள் குறித்தும் தகவல் கிடைத்தால் தாராளமாக தெரிவிக்கலாம்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

இந்தநிலையில் பலியான 4 மாவோயிஸ்டுகளின் புகைப்படங்களை மாவோயிஸ்டு இயக்கம் சார்பில் சமூக வலைதளத்தில் வெளியிட்டு உள்ளதுடன், அதில் மாவோயிஸ்டு போராளிகளுக்கு வீரவணக்கம் என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது. 

Next Story